இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமியை பந்தாக்கி பாதாள லோகத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைத்தான்.
தன்னை மீட்கும்படி பூமாதேவி மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள். அவரும் வராக அவதாரம் எடுத்து பாதாளம் சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார்.
அந்த ஆதிவராகப் பெருமாள் திருவருள்புரியும் பல தலங்களுள் கும்பகோணமும் ஒன்று. தாயார் அம்புஜவல்லியுடன் வராகதீர்த்தத்தையே தல தீர்த்தமாகக் கொண்டு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்படி பூஜைகளை வராகமூர்த்தி ஏற்றருளும் திருத்தலம் இது.
கும்பகோணத்தில் மகிமை மிக்க மகாமகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வராகமூர்த்தி எழுந்தருளிவிட்டதால் இவர் ஆதிவராகர் என வணங்கப்படுகிறார்.
இவரே கும்பகோணத்தில் திருவருள்புரியும் தெய்வங்கள் அனைவருக்கும் முதன்மையானவர்.
மாசி மகத் திருவிழாவின் போது கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்ரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்று ஆதிவராகர் என ஐம்பெரும் மூர்த்திகளும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.
மூலக்கருவறையில் ஆதிவராகர் பூமாதேவியை தன் இடது பக்க மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். பூமாதேவி திருமாலை வணங்கிய நிலையில் அமர்ந்தருள்கிறாள்.
தினமும் இந்த ஆதிவராகருக்கு அர்த்தஜாம பூஜையின் போது கோரைக்கிழங்கு மாவுருண்டையை நிவேதனமாகப் படைக்கின்றனர். நாம் அமர, படுக்கப் பயன்படுத்தும் பாய், கோரை புல்லால் ஆனது. இந்த கோரைப் புல்லின் அடியில் முளைப்பதே கோரைக்கிழங்கு.
அதைப் பொடித்து அதனுடன் அரிசிமாவு, சர்க்கரை, நெய் மற்றும் வாசனைப் பொருட்கள் கலந்து உருண்டையாகப் பிடித்து வராகமூர்த்திக்கு நிவேதிப்பர்.
மறுநாள் காலையில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர். பூமியை இரண்யாட்சனிடமிருந்து மீட்டு வந்த பெருமாள் என்பதால், பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு கலந்த நிவேதனம் இந்த மூர்த்திக்கு படைக்கப்படுகிறது.
இத்தல உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடது பாதத்தை ஆதிசேஷனின் மீது வைத்தபடி அருட்காட்சி தருகிறார்.
அவருக்கு முன்பாக உள்ள வராக சாளக்கிராமத்தில் சங்கு, சக்ர ரேகைகள் உள்ளன. அந்த சாளக்கிராமத்திற்கு தினமும் பாலபிஷேகம் நடத்தப்படுகிறது.
பிராகாரத்தில் விஷ்வக்சேனர், நிகமாந்த மகாதேசிகர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள துளசி மாடத்தின் கீழ் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்த வராகசுவாமியை வணங்கி தீபமேற்றி வழிபடுகின்றனர்.
வராக தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே உள்ளது. சார்ங்கபாணி, சக்ரபாணி ஆலயங்களுக்கு மிக அருகே இத்தலம் உள்ளது.
மாசிமகத்திருவிழா இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வராக ஜயந்தி அன்று ஆலயம் திருவிழாக்கோலம் காணும்.
திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, நிலம் வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்த ஆதி வராகர் திருவருள் புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தம் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புத்தாடை அணிவித்து தம் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
- குருசரண்
Varakamurtti
Thanks to Indra Srinivasan for sharing this article.
0 comments:
Post a Comment