Wednesday, July 30, 2014

Aadi masam thiruvadirai 25-07-14









Thanks to Sriramanuja 1000 for sharing the photos.

Monday, July 21, 2014

ஸ்ரீரங்கம்










""என் அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' என்று திருப்பாணாழ்வாராலும் ""இச்சுவைத் தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்று தொண்டரடிப் பொடியாழ்வாராலும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைத் தாங்கியுள்ளது திருவரங்கம்.
கிருதயுகம் தொடங்கி இன்று கலியுகம் இந்நாள் வரை இந்தக் கோவிலுக்கென்று நீண்ட வரலாறு உண்டு கலாச்சாரக் கருவூலம் நம் திருவரங்கம் திருக்கோயில். கோயிலும் திருவரங்கப் பெருநகரும் பாரதத்தின் பண்பாட்டு மையமென திகழ்கின்றன.
வெகு காலத்திற்கு முன்பு பிரம்மாவினாலும், சூரியனாலும் சத்யலோகத்தில் ஆராதிக்கப்பட்டு பின்பு வைவஸ்வத மனுவின் மூலமாக இந்த பூவுலகில் ராமனின் முன்னோன் இஷ்வாக சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் அரண்மனைக்கு எழுந்தருளி தசரதகுமாரன் ஸ்ரீராமன் வரை சூரியகுல பேரரசர்களால் ஆராதிக்கப்பட்டு இறுதியில் ஸ்ரீராமனால் ""இஷ்வாகு குலதனம்'' என்ற இப்பெருமான் ராமரது பட்டாபிஷேக காலத்தில் தன்னையே சரண் என்று அடைந்த விபீஷண ஆழ்வானுக்கு அளிக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் சோழகுல அரசன் தர்மவர்மாவின் தவத்திற்கு அருள்புரிய எண்ணி, காவேரி மத்தியில் மிக ரமணீயமான சோலைகளின் நடுவில் எழுந்தருளி அங்கிருந்தபடியே தென்னிலங்கை நோக்கி அருள் கூர்ந்து பள்ளிகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ கொள்கைப்படி கோயில் என்றாலே திருவரங்கத்தைத் தான் குறிக்கும். இதன் பெருமையையும் மகத்துவத்தையும் ஸ்வாமி தேசிகன் தன் அதிகார ஸ்ங்கரஹத்தில் கூறுகிறார்.
பரமசிவன் நாரதருக்க ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம், ரங்கம் என வழங்கப்படுகிறது.
சத்ய லோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீரங்கம் சேர்ந்த பிறகுதான் ரங்கனாதன் என அழைக்கப்படலானார். தர்மவர்மா காலத்திற்குப் பிறகு அநேக ஆண்டுகள் காலவசத்தால் தற்போது உள்ள இடம் மணற்காடாகக் காட்சியளித்தது.
தர்மவர்மா பரம்பரையில் வந்த சோழ மன்னன் வேட்டையாடி களைப்படைந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கையில் மரத்தின் மேலே அமர்ந்திருந்த கிளி,
""காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச வேதச்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக
என்ற வசனம் சொல்லக் கேட்டு வியப்படைந்து பார்க்கையில் அந்தக் கிளி அதே ஸ்லோகத்தைப் பல தடவை சொல்லக் கேட்டான். பகவானே அவன் கனவில் வந்து ""யாம் இம்மரத்தின் கீழ்தான் இருக்கிறோம்'' என்று சொல்லவும் அரசன் மணற்மேட்டைத் திருத்தி, ஸ்ரீரங்க விமானத்தை வெளிப்படுத்தினான் என்பது வரலாறு.
ஆகவே கிளிச்சோழன் எனப் பெயர் பெற்ற அவ்வரசன் கிளி மண்டபம் உட்பட பல திருப்பணிகளைச் செய்தான். இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேதஸ்வரூபன் என்னும் விமானத்தை ப்ரணவாகார விமானம் என்றும், கலசங்களை வேதச்ருங்கக்ளெனவும் அழைப்பர்.
காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன. காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் 108 ஆகும். அவற்றுள் முதன்மையானது திருவரங்கம் இந்த அரங்களை வழிபட்டால் மற்றைய திவ்யதேங்களின் மூர்த்திகளை வழிபட்டதற்க ஒப்பாகும் என்றும், ஒவ்வொரு இரவிலும் திவ்யதேச மூர்த்திகள் இங்கு வந்து ஒன்றாக இருந்து பின்பு தமது திவ்யதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதாக ஓர் ஐதீகம் உண்டு.


Wednesday, July 16, 2014

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

நான் என்ன செய்துவிட்டேன்? பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’



1. அழைத்துவந்த அக்ரூரர்
தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால், கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான். பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம்முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.
வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்துவந்து, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான்.
கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும் கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.
கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டுமே? அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.
கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர். எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டினான்.
அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர். கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர். நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர். அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.
கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர். கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி, அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான்.
வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார். கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர். அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார். அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது. மேல்நோக்கிப் பார்த்தார்.
தேரில் கண்ணன் வீற்றிருந்தான். மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார். அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார்.
கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான். குவலயாபீடத்தைக் கொன்றான். மல்லர்களை எதிர்த்துக் கொன்றான். இறுதியில் கம்சனையும் வதைத்தான்.
பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர். நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர். இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,
“அழைத்து வருகிறேன் என்றேனோ
அக்ரூரரைப் போலே!”
என்று குறிப்பிட்டாள். அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார். அதனால் கொடியவர்கள் மாண்டனர். நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார். ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை, திருக்கோளூர்ப் பெண்பிள்ளை வியந்து போற்றினாள்.


Thanks to Indra Srinivasan for sharing this article.

Wednesday, July 9, 2014

நரசிம்ம அவதாரம்



பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான்.அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும்.
நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான்.
இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான்.

அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான்.
மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான். உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது.
தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர்.
பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை.
உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார்.
அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான்.
அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார்.
கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான்.
லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும்.

எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.
யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான்.
பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர்.
வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள்.
காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார்.
விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன்.
அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவன் தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான்.
இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார்.
இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.
அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள்.
இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான்.
ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான்.
கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான்.
எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன்.
பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள்.
ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள்.
அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.
மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான்.
அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.
ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹரியைப் புகழ்ந்து பேசினான். அந்தணர்களே!
நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர்.
உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது.
ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான்.
இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான்.
அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன்.
ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான்.
பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர்.
தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர்.
அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான்.
அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.
வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார்.
நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.
அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.
இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான்.
ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர்.
இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான்.
அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார்.
என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள்.
ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன்.
எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தால், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும்.
நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான்.
இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான்.
பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன.
தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான்.
அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.
தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான்.
ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும்.
இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன்.
இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா? அதைப் பார்ப்போம்.
இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான்.
அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர்.
தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார்.
அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான்.
நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான்.
விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.
ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான்.
தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார்.
அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது.
அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர்.
ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள்.
அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார்.
அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான்.
தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார்.
பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான்.
அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர்.
நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான்.
மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார்.
மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார்.
பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.
நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹரியை அனுஷ்டிக்கிறவர்கள் மேன்மை அடையலாம்.

Thanks to Indra Srinivasan for sharing this article.

நாதன் கோயில் நாயகன்


Photo downloaded from Google

எப்போதும் திருப்பாற்கடலில் திருமாலின் பாதார விந்தங்களை பற்றிக் கொண்டிருந்த திருமகளுக்கு அவர்தம் திருமார்பிலேயே எப்போதும் வசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
அதற்காக பூவுலகில் தற்போதைய நாதன்கோயில் எனும் செண்பகாரண்யம் வந்து கடும் தவம் புரிந்தாள், மகாலட்சுமி. தேவியின் பிரிவால் வாடிய எம்பிரான் பிராட்டிக்கு தரிசனமளித்து, அவள் விரும்பியபடியே அவளை தன் திருமார்பில் ஏற்று நிரந்தரமாக அங்கே இடம் தந்தார்.
கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டதால் பெருமாள் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இவர் யோக ஸ்ரீநிவாசன் என்று திருநாமம் கொண்டருள்கிறார்.
வைணவ ஆலயத்திற்கு நந்திபுர விண்ணகரம் எனப் பெயர்க் காரணம் என்ன? முன்பொரு சமயம் திருமாலை காண அதிகார நந்தி வைகுண்டத்திற்கு வந்தார். வைகுண்டத்தை காக்கும் துவார பாலகர்களான ஜெய-விஜயர்கள், ‘‘பெருமாள் மகாலட்சுமியுடன் தனிமையில் இருப்பதால் தற்போது அவரை தரிசிக்க இயலாது;
பின்பொரு சமயம் வாருங்கள்’’ என்று கூற, அவர்களை மீறி அதிகார நந்தி வைகுண்டத்திற்குள் புக முயன்றார். தங்கள் கட்டுப்பாட்டை உடைக்க முயன்ற அவரை நோக்கி, ‘‘எப்போதும் இல்லாத அளவு உன் உடல் நெருப்பாக கொதிக்கட்டும்’’ என ஜெய-விஜயர்கள் சாபமிட்டனர்.
சாபத்தால் உடலெல்லாம் தகிக்க, அதைத் தாங்க முடியாத நந்தி பரமனிடம் முறையிட, பரமனும் நாதன்கோயில் எனப்படும் செண்பகாரண்யத்தில் திருமாலை நோக்கி தவம் புரியுமாறு கூறினார்.
அதிகார நந்தியின் தவத்திற்கு மனமிரங்கிய பெருமாள் அவருக்கு காட்சியளித்து சாப விமோசனமும் தந்தார். சாபம் நீங்கிய நந்தியும் தன் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும் என வரம் கேட்க, அன்று முதல் அத்தலம் ‘நந்திபுர விண்ணகரம்’ ஆயிற்று.
சந்நதியின் இடதுபுறம் சுவரில் அதிகார நந்தியின் திருவுருவம் அமைந்துள்ளது. மூலவர் ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள் என பல்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறார்.
இத்தல தீர்த்தமாக நந்திக்குளமும் தல விமானமாக மந்தார விமானமும் உள்ளன. திருமகள், நந்தி, சிபிச் சக்ரவர்த்தி ஆகியோருக்கு நேரில் தரிசனமளித்த பெருமாள் இவர்தான்.
தன்னையே புறாவிற்காக சிபி மன்னன் அளித்த தலமிது. காளமேகப் புலவர் பிறந்த பெருமையையும் பெற்றது. சந்திர தோஷம் நீங்க வணங்க வேண்டிய தலமிது. உற்சவ மூர்த்தி பஞ்சாயுதங்களோடு மிளிரும் தலம்.
தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, பாசிப்பயிறால் ஆன நிவேதனம் செய்தால் பிரார்த்தனைகள் பலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நோய்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
திருமங்கையாழ்வார் ‘தந்தை மனம்’ எனும் பாசுரத்தில் இப்பெருமாளை துதிக்கிறார். நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்றான நாதன்கோயில் இது. கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்திலிருந்து 3 கி.மீ. கிழக்கே பழையாறை வழியில் நாதன்கோயில் அமைந்துள்ளது.

Thanks to Indra Srinivasan for sharing this article.

Tuesday, July 8, 2014

குசேலன் ராமாயண கதா பாத்திரம்



பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும், இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.
ஆனால் ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது. அல்லவா?
இந்த ராமாயணக் குசேலனின் பெயர்.... ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.
குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக ஸ்ரீராமன் மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான்.
இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.
ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் ஆனந்தன்.
ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும் சுதாமனும் கண்ணனும் போல வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று. தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை.
அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றவிட்டான்.
வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குக் சென்றான் அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.
பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை. சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்?
இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டிபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன்.
தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ராமா...... ராமா...... என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான்.
காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே.... பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை.
ராமா.... ராமா... என்று ஜபித்துக்கொண்டு அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது.
ஆனால், அவனது ராம ஜபம் மட்டும் நிற்கவில்லை. காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது, இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன.
விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன்.
அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ராமா..... ராமா.... என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.
ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர்.
அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ராம நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர்,
அவர்களில் ஒருவரது கால்பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ராமா... ராமா....... எங்கிருக்கிறாய் என் ராமா? என்று கதறினான்.
காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை, பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.
இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர். அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார்.
ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும், அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார்.
ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.
அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக் கொண்டிருந்தன.
குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.
ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான்.
அப்போது எல்லோரும் அதிர்ச்சியில் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை இத்தனை காலமாய் தேடுகிறேனடா? என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.
ராமனை இறுகத் தழுவிக் கொண்டான். கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன் அடே ராமா என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர்.
எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான் என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, என்னை மன்னித்துவிடு அனந்தா! என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன்.
என் தவற்றை மன்னித்துவிடு என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.
அப்போது வசிஷ்டர், ராமா....... இவர் யார்? என்று கேட்க, தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன், தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் பிரபு என்றும் மகாராஜா என்றும்தான் அழைக்கிறார்கள்.
என்னை அடே ராமா என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்! என்று கூறினான் ஸ்ரீராமன்.
வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!
இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கவுரவம் தரலாம்? என்று கேட்டான்.
பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள்.
தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது. இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை! என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.
இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன்.
அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது. ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?

Monday, July 7, 2014

periyazhwar from various divyadesam and abhimana sthalam

tirupati govindaraja swamy temple

koodal alagar temple madurai


srirangam
oppiliappan temple
Thiruneermalai
Thiruvaheendrapuram
Thiruvallikeni
Kanchipuram

Sriperumbudur
SVDD Mylapore

Periyazhwar thirunakshatram












From the book "Bhakthi Poonga"

அங்கதன்





சகலகலா வல்லவன் அங்கதன்: ராமரின் பட்டாபிஷேகக் காட்சியை விவரிக்கும்போது கம்பன், அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த... என்று அங்கதனைச் சிறப்பித்துப் பாடுகிறார்.
ராம -ராவணப் போரில் அனுமனுக்கு இணையாக ராமனுக்குத் தோள் கொடுத்து உறுதுணையாக இருந்தவன், அங்கதன். கும்பகர்ணனுடன் போரிட்டு வென்றான்; மகாபார்சுவனைக் கொன்றான்.
ராமகதையில் வரும் பெரும் பராக்கிரமசாலிகளுள் ஒருவனான இந்த அங்கதன் யார்? இந்திரனுக்கும் அரணிக்கும் மகனாகப் பிறந்தவன் வாலி. மகா பலசாலி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? வாலிக்குப் பிறந்த சூரப்புலிதான் அங்கதன்.
வாலி பலசாலி என்றால் அவன் மனைவி தாரையோ சிறந்த புத்திக்கூர்மை உள்ளவள். தந்தையின் வலிவையும் தாயின் அறிவையும் ஒருங்கே பெற்றிருந்தான் அங்கதன்.
முரட்டுத் தனமற்ற வீரமும் கோழைத் தனமற்ற விவேகமும் கொண்டிருந்த அவன், பேரழகனாகவும் விளங்கினான். செயலாற்றலில் நுணுக்கம் எனப்படும் யுக்திமுறைகள் அத்தனையும் அவனுக்கு அத்துப்படி!
சுக்ரீவன், வாலியின் சகோதரன். சுக்ரீவனை வஞ்சித்து, அவனை வலுக்கட்டாயமாக சண்டைக்கும் அழைத்தான் வாலி.
நேர்மையற்ற வாலியை சுக்ரீவன் எதிர்க்கத் துணிந்த போது, அவனுக்குத் துணை நின்றார் ராமன். கிஷ்கிந்தையில் வாலி - சுக்ரீவன் மற்போர் நடந்தபோது, ராமன் மறைந்திருந்து தாக்கிய அம்பால் தாக்குண்டு வீழ்ந்தான், வாலி.
உயிர் துறக்கும் தறுவாயில் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் காண விரும்பிய வாலி, தன் மகன் அங்கதனை அழைத்தான். அவனுக்கு நல்லுரைகள் வழங்கினான்.
என் சகோதரன் சுக்ரீவனுக்கு நான் பாவம் செய்துவிட்டேன். அதற்குப் பரிகாரமாக அங்கதா, நீ எப்போதும் சுக்ரீவனுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அவனது எதிரிகள் உனக்கும் எதிரிகளே! யாரிடமும் நீ அளவுக்கு அதிகமாக ஒட்டி உறவாடிப் பழகவும் வேண்டாம்.
யாரையும் வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம் என்று மகனுக்கு அறிவுறுத்தினான், வாலி. தந்தையின் வாக்குப்படியே வாழ்ந்த அங்கதன், வாலிக்குப் பின் கிஷ்கிந்தையின் இளவரசனானான்.
சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க சுக்ரீவன் தன் படைவீரர்களை நாலா திசைக்கும் அனுப்பினான். அப்போது அங்கதன் அனுமனோடு தென்திசை நோக்கிச் சென்றான்.
இடையூறான சந்தர்ப்பங்களிலும் அங்கதன் விடாமுயற்சியோடு முனைவதைக் கண்டு அனுமனே வியந்து போனான்.
அங்கதனின் குணவிசேஷங்கள் அவனுக்கு ஆச்சரியமளித்தன. ஞானத்தின் எட்டு லட்சணங்கள் என்று கூறப்படுவது என்னென்ன?
பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலை நிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன.
இந்த எட்டு லட்சணங்களும் அங்கதனிடம் முழுமையாக அமைந்திருந்ததை அனுமன் அறிந்து மகிழ்ந்தான் என்கிறார் வால்மீகி.
அங்கதன் தனது வானர சேனைகளுடன் சேர்ந்து சீதையைத் தேடும் முயற்சியில் பலன் ஏற்படாதது கண்டு, மனம் சோர்ந்து, கால விரயம் ஆவது பற்றிக் கவலை கொள்கிறான்.
கடலைத் தாண்டி இலங்கை செல்வது என்று முடிவு ஆனதும், அங்கதன் மீண்டும் உற்சாகமடைந்து ஒரு இளவரசன் என்கிற பொறுப்புடன் சேனைகளை நடத்திச் செல்கிறான்.
ஆனால், சமுத்திரத்தைத் தாண்டிச் செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்று தீர்மானமாகி விட்டது. சீதையைக் கண்டு, அனுமன் திரும்பி வந்து ராமரிடம் கூறியதும், அடுத்து வானர சேனைகள் இலங்கை மீது படையெடுப்பு நடத்தவும், இலங்கை நோக்கி அணிவகுத்துச் செல்லவும் சமுத்திரத்தின் மீது சேது பாலம் கட்டப்பட்டது.
இலங்கையை அடைந்ததும் ராவணனுக்குத் தூது அனுப்ப அங்கதனையே தேர்ந்தெடுத்தார்கள். சீறிப் புறப்பட்டான் அங்கதன். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல, ராவணனை அவன் அரண்மனைக்கே சென்று நேருக்கு நேர் சந்தித்தான்.
வந்தவன் அங்கதன்; அவன் வாலியின் மைந்தன் என்று அறிந்தவுடன் ராவணன், அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு ஆணையிட்டான்.
அது கேட்ட அங்கதன், புயலெனக் கிளம்பி, ராவணனின் புகழ் மிக்க மாளிகையின் விமான கோபுரத்தை இடித்துத் தகர்த்து விட்டு, வெளியேறித் தப்பினான்.
அங்கதன் தப்பிச் சென்ற சாகசத்தைக் கண்ட ராவணனுக்கு அப்போதே நம்பிக்கை தளர்ந்து விட்டது.
தூதுவனாக வந்த அங்கதனே இவ்வளவு தீரனாக இருந்தால், அவனை அனுப்பிய தலைவர்களான ராம லட்சுமணர்கள் இன்னும் எவ்வளவு அதீத ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும்! என்று எண்ணி, தனது எதிர்காலத் தோல்வியை அப்போதே மனக்கண்ணால் கண்டு விட்டான்.
இலங்கையுத்தத்தில் அங்கதன் நிகழ்த்திய வீர சாகஸங்கள் அதி உன்னதமானவை. இதனாலேயே ராம பட்டாபிஷேகத்தன்று, ராமர் அவனுக்குப் பல பரிசுகளை வழங்கினார்.
நவரத்தினங்கள் இழைத்த அங்கதங்களை (தோள்வளைகள்) அவனுக்குப் பரிசாக அளித்தார். பட்டாபிஷேகத்தின் போதும் ராமர் அருகில் அவன் உடைவாளோடு வீரம் மேலிட விளங்கி நின்றான்.
அதனாலேயே கம்பன், பட்டாபிஷேகக் காட்சியை சித்திரிக்கும்போது அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த என்று பாடி மகிழ்கிறார்.

Thanks to Indra Srinivasan for sharing this article.

Sunday, July 6, 2014

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு தனி மரபே இருக்கிறது

அண்ணன், தாயார், அப்புறம்தான் பெருமாள்!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு தனி மரபே இருக்கிறது. அதாவது நேரடியாக திருமலையேறி அவரை தரிசிக்கக் கூடாதாம்.
முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும், அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும், அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!
இந்த நடைமுறை இப்போதைய வழக்கமல்ல; ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம்.
முதலில் கோவிந்தராஜப் பெருமாளை ஏன் தரிசிக்க வேண்டும்?
இவர் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார். சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது.
அதாவது தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
அதே சயன கோலத்தில் அற்புதமாக தரிசனம் தருகிறார், இந்த திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும்.
இவருடைய கோயில் மிகப் பெரியதாக விளங்குகிறது. பளபளக்கும் கலசங்களுடன் மின்னும் ராஜகோபுரத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் நரசிம்மர் நமக்கு ஆசியளிக்கிறார்.
அடுத்து இரு புறங்களிலும் மணவாள மாமுனிகள், ரங்கநாத சுவாமி, சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் ஆகியோர் சந்நதிகள் நம்மை வாழ்த்தி மூலவர் அருளாசி பெற அன்புடன் உள்ளே அனுப்பி வைக்கின்றன.
கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள்.
காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது. இவருக்கு எதிரே பூகா தீர்த்தம் அமைந்துள்ளது. ராமர் அபிஷேகத்துக்கு இந்த தீர்த்தத்திலிருந்துதான் நீரெடுத்துச் செல்கிறார்கள்.
இன்னும் உள்ளே சென்றால், புண்டரீகவல்லித் தாயாரை சேவிக்கலாம். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.
அனந்தாழ்வார், மதுரகவி ஆழ்வார், கூரத்தாழ்வார், ராமானுஜர், கல்யாண வெங்கடேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து கொலுவிருந்து தாயாரின் அருளை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.
பின்னால் யாகசாலை. கருவறையை வலம் வந்தால் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும் அதனை வலியுறுத்துகிறார்கள்.
கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
கடைக்கண்ணால் நம்மைப் பார்க்கிறாரோ! ‘கவலைப்படாதே, வந்த வேலை மனநிறைவாக முடியும்’ என்று ஆசிர்வதிக்கிறாரோ! தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள். திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள்.
திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.
தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம்.
இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள். இதே கோயிலில் ருக்மிணி, சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிப் பெருமாளை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம்.
கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் சந்நதி கொண்டிருப்பதும் தனி விசேஷம்தான்.
கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம்.
தனித்திருந்து, திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் இந்த பத்மாவதி தாயார்.
இந்தத் தலத்துக்குள் நுழையும்போதே தண்ணென்று தென்றல் வீசுகிறது.
அது, பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து, நம்மை அரவணைத்துக் குளிர்விக்கிறது. சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள்.
கார்த்திகை மாதம் சுக்ல பட்ச பஞ்சமி நாளன்று தாயார் பிரம்மோத்ஸவ கொண்டாட்டத்தின்போது இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.
படிகளேறி கோயிலுக்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார்.
இந்த உற்சவரின் சிரசின் மீது தங்கத் தாமரை கவிழ்த்து வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். வெண் பட்டாடை அணிவித்து வைரப் பதக்கமும் மங்கலத் தாலியும் நகைகளும் பூட்டி பேரழகு செய்திருக்கிறார்கள். இந்த அன்னை மேளதாளங்கள் முழங்க, தீவட்டி ஒளி வழிகாட்ட, பிராகார வலம் வருகிறாள்.
தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம். திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன.
இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம்.
அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டியபடி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம். பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம்.
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் இங்கே தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக ஸ்ரீநிவாசன் சேவை சாதிக்கிறார்.
பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் என்கிறார்கள். இந்தத் தலம் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தாயாரை உளமாற சேவித்து திருமலையேற அனுமதியும் பெற்றுக் கொள்வோம்.

Thanks to Indra Srinivasan for this article.

Monday, June 30, 2014

AZWARGAL HAARAM and SRI KRISHNA ANUBHAVAM Documentary DVD Free


After "SRI KRISHNA ANUBHAVAM" Madyajagane Ramanuja Dasan Swami compiled next Documentary DVD on Aazhwars "AZWARGAL HAARAM". Both DVDs are sampradaya orientated Compilations. Interested can send your postal address to his email "webramanuja@yahoo.com". He can be reached on his cell phone 919789594509 as well.
He is distributing the DVDs at free of cost.

Adiyen's Vinnapam: If you can, please do a small sambhavanai for his Wonderful Kainkariyam.


 Bank Name : AXIS BANK
Account Name : Madyajagane.P
Account No. : 911010035433970
IFS Code : UTIB0000209 (if needed)
Branch : Pondicherry

  
Thanks to Authi Subramanian for sharing this information.

Thursday, June 26, 2014

Malayankulam Sri Veetrirundha Narayanar temple




Malayankulam is a village in Uthiramerur taluk of Kanchipuram district. This village is 15kms from uthiramerur. Moolavar is veetrirundha narayanar.

The 3rd Jeeyar of Sri Ahobila Mutt was born in this village and he worshiped the Perumal. There are  sannidhis for Sri Andal, Sri Nammazhvar, Sri Anjeneyar and 3rd Jeer of Sri Ahobila Mutt are also seen in this temple.
    
For more details contact Sri Balaji Bhattacharyar : 9940978598.

Unjal utsavam in Melkote

unjal utsavam was celebrated at Thirunarayanapuram (Melukote) from 23rd june to 25th june

 Day 1

Day 2


Day 3



Thanks to Narasimhapriyan for sharing the photos.