Wednesday, July 9, 2014

நாதன் கோயில் நாயகன்


Photo downloaded from Google

எப்போதும் திருப்பாற்கடலில் திருமாலின் பாதார விந்தங்களை பற்றிக் கொண்டிருந்த திருமகளுக்கு அவர்தம் திருமார்பிலேயே எப்போதும் வசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
அதற்காக பூவுலகில் தற்போதைய நாதன்கோயில் எனும் செண்பகாரண்யம் வந்து கடும் தவம் புரிந்தாள், மகாலட்சுமி. தேவியின் பிரிவால் வாடிய எம்பிரான் பிராட்டிக்கு தரிசனமளித்து, அவள் விரும்பியபடியே அவளை தன் திருமார்பில் ஏற்று நிரந்தரமாக அங்கே இடம் தந்தார்.
கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டதால் பெருமாள் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இவர் யோக ஸ்ரீநிவாசன் என்று திருநாமம் கொண்டருள்கிறார்.
வைணவ ஆலயத்திற்கு நந்திபுர விண்ணகரம் எனப் பெயர்க் காரணம் என்ன? முன்பொரு சமயம் திருமாலை காண அதிகார நந்தி வைகுண்டத்திற்கு வந்தார். வைகுண்டத்தை காக்கும் துவார பாலகர்களான ஜெய-விஜயர்கள், ‘‘பெருமாள் மகாலட்சுமியுடன் தனிமையில் இருப்பதால் தற்போது அவரை தரிசிக்க இயலாது;
பின்பொரு சமயம் வாருங்கள்’’ என்று கூற, அவர்களை மீறி அதிகார நந்தி வைகுண்டத்திற்குள் புக முயன்றார். தங்கள் கட்டுப்பாட்டை உடைக்க முயன்ற அவரை நோக்கி, ‘‘எப்போதும் இல்லாத அளவு உன் உடல் நெருப்பாக கொதிக்கட்டும்’’ என ஜெய-விஜயர்கள் சாபமிட்டனர்.
சாபத்தால் உடலெல்லாம் தகிக்க, அதைத் தாங்க முடியாத நந்தி பரமனிடம் முறையிட, பரமனும் நாதன்கோயில் எனப்படும் செண்பகாரண்யத்தில் திருமாலை நோக்கி தவம் புரியுமாறு கூறினார்.
அதிகார நந்தியின் தவத்திற்கு மனமிரங்கிய பெருமாள் அவருக்கு காட்சியளித்து சாப விமோசனமும் தந்தார். சாபம் நீங்கிய நந்தியும் தன் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும் என வரம் கேட்க, அன்று முதல் அத்தலம் ‘நந்திபுர விண்ணகரம்’ ஆயிற்று.
சந்நதியின் இடதுபுறம் சுவரில் அதிகார நந்தியின் திருவுருவம் அமைந்துள்ளது. மூலவர் ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள் என பல்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறார்.
இத்தல தீர்த்தமாக நந்திக்குளமும் தல விமானமாக மந்தார விமானமும் உள்ளன. திருமகள், நந்தி, சிபிச் சக்ரவர்த்தி ஆகியோருக்கு நேரில் தரிசனமளித்த பெருமாள் இவர்தான்.
தன்னையே புறாவிற்காக சிபி மன்னன் அளித்த தலமிது. காளமேகப் புலவர் பிறந்த பெருமையையும் பெற்றது. சந்திர தோஷம் நீங்க வணங்க வேண்டிய தலமிது. உற்சவ மூர்த்தி பஞ்சாயுதங்களோடு மிளிரும் தலம்.
தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, பாசிப்பயிறால் ஆன நிவேதனம் செய்தால் பிரார்த்தனைகள் பலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நோய்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
திருமங்கையாழ்வார் ‘தந்தை மனம்’ எனும் பாசுரத்தில் இப்பெருமாளை துதிக்கிறார். நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்றான நாதன்கோயில் இது. கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்திலிருந்து 3 கி.மீ. கிழக்கே பழையாறை வழியில் நாதன்கோயில் அமைந்துள்ளது.

Thanks to Indra Srinivasan for sharing this article.

0 comments:

Post a Comment