""என் அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' என்று திருப்பாணாழ்வாராலும் ""இச்சுவைத் தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்'' என்று தொண்டரடிப் பொடியாழ்வாராலும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைத் தாங்கியுள்ளது திருவரங்கம்.
கிருதயுகம் தொடங்கி இன்று கலியுகம் இந்நாள் வரை இந்தக் கோவிலுக்கென்று நீண்ட வரலாறு உண்டு கலாச்சாரக் கருவூலம் நம் திருவரங்கம் திருக்கோயில். கோயிலும் திருவரங்கப் பெருநகரும் பாரதத்தின் பண்பாட்டு மையமென திகழ்கின்றன.
வெகு காலத்திற்கு முன்பு பிரம்மாவினாலும், சூரியனாலும் சத்யலோகத்தில் ஆராதிக்கப்பட்டு பின்பு வைவஸ்வத மனுவின் மூலமாக இந்த பூவுலகில் ராமனின் முன்னோன் இஷ்வாக சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் அரண்மனைக்கு எழுந்தருளி தசரதகுமாரன் ஸ்ரீராமன் வரை சூரியகுல பேரரசர்களால் ஆராதிக்கப்பட்டு இறுதியில் ஸ்ரீராமனால் ""இஷ்வாகு குலதனம்'' என்ற இப்பெருமான் ராமரது பட்டாபிஷேக காலத்தில் தன்னையே சரண் என்று அடைந்த விபீஷண ஆழ்வானுக்கு அளிக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் சோழகுல அரசன் தர்மவர்மாவின் தவத்திற்கு அருள்புரிய எண்ணி, காவேரி மத்தியில் மிக ரமணீயமான சோலைகளின் நடுவில் எழுந்தருளி அங்கிருந்தபடியே தென்னிலங்கை நோக்கி அருள் கூர்ந்து பள்ளிகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ கொள்கைப்படி கோயில் என்றாலே திருவரங்கத்தைத் தான் குறிக்கும். இதன் பெருமையையும் மகத்துவத்தையும் ஸ்வாமி தேசிகன் தன் அதிகார ஸ்ங்கரஹத்தில் கூறுகிறார்.
பரமசிவன் நாரதருக்க ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம், ரங்கம் என வழங்கப்படுகிறது.
சத்ய லோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீரங்கம் சேர்ந்த பிறகுதான் ரங்கனாதன் என அழைக்கப்படலானார். தர்மவர்மா காலத்திற்குப் பிறகு அநேக ஆண்டுகள் காலவசத்தால் தற்போது உள்ள இடம் மணற்காடாகக் காட்சியளித்தது.
தர்மவர்மா பரம்பரையில் வந்த சோழ மன்னன் வேட்டையாடி களைப்படைந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கையில் மரத்தின் மேலே அமர்ந்திருந்த கிளி,
""காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச வேதச்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக
என்ற வசனம் சொல்லக் கேட்டு வியப்படைந்து பார்க்கையில் அந்தக் கிளி அதே ஸ்லோகத்தைப் பல தடவை சொல்லக் கேட்டான். பகவானே அவன் கனவில் வந்து ""யாம் இம்மரத்தின் கீழ்தான் இருக்கிறோம்'' என்று சொல்லவும் அரசன் மணற்மேட்டைத் திருத்தி, ஸ்ரீரங்க விமானத்தை வெளிப்படுத்தினான் என்பது வரலாறு.
ஆகவே கிளிச்சோழன் எனப் பெயர் பெற்ற அவ்வரசன் கிளி மண்டபம் உட்பட பல திருப்பணிகளைச் செய்தான். இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேதஸ்வரூபன் என்னும் விமானத்தை ப்ரணவாகார விமானம் என்றும், கலசங்களை வேதச்ருங்கக்ளெனவும் அழைப்பர்.
காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன. காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் 108 ஆகும். அவற்றுள் முதன்மையானது திருவரங்கம் இந்த அரங்களை வழிபட்டால் மற்றைய திவ்யதேங்களின் மூர்த்திகளை வழிபட்டதற்க ஒப்பாகும் என்றும், ஒவ்வொரு இரவிலும் திவ்யதேச மூர்த்திகள் இங்கு வந்து ஒன்றாக இருந்து பின்பு தமது திவ்யதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதாக ஓர் ஐதீகம் உண்டு.
0 comments:
Post a Comment