Tuesday, January 8, 2013

நம்மாழ்வார் மோட்சம்


வைகுண்ட ஏகாதசி - 08 (8.1.2013)

வைகுண்ட ஏகாதசி இவ்வருடம் இனிதே முடிந்தது. பெரும் எழுச்சியுடன் பக்தர்களின் பேரலைகளைக் காண மகிழ்ச்சியாகயிருந்தது...! எவ்வருடமும் இல்லாத ஒரு ஜன சமுத்திரம்...! அரங்கனும் அலுப்பே என்பதில்லாமல் அங்கும் இங்கும் அதீத ப்ரேமையுடன் அலைந்தான்..! அடியார்களைக் கண்டால் அவன் மகிழ்வுக்குக் கேட்கவா வேண்டும்...!

நம்மாழ்வார் மோட்சம்தான் இவ்விழாவின் முக்கிய முத்தாய்ப்பான நிகழ்வு (Climax). இவ்வருடம் இவ்வைபத்தினை நடத்திட வாய்ப்பு ஈந்த அரங்கனுக்கும், என் அண்ணா நந்து பட்டருக்கும் என் மனமார்ந்த நன்றி..! என் உயிர் உள்ளளவும் மறக்கமுடியாத ஒரு வைபவம்...!

அரங்கனையும் ஆழ்வாரையும் காணக்காண ஒரு பரவசம்..! மெய்சிலிர்ப்பு..! உயிரோட்டம்...! அசாத்திய அதிர்வு...! இருவரின் உணர்வுபூர்வமான திருவுள்ள பரிமாற்றத்தினை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது..! இந்த அரிய நிகழ்வினை உளப்பூர்வமாக பலர் கண்டு கண்ணீர் உகுக்கக் கண்டேன்..!

நம்மாழ்வார் நம்பெருமாளின் திருப்பாதங்களில் தம் சிரம் பதித்து தண்டனிடுகிறார்..!

அரையர்..

”அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி*
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன*
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்* முடிந்த
அவாவிலந்தாதியிப் பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே..!”

என்று ஒரு உணர்வெல்லாம் ஒன்று திரட்டி தாளத்தோடு பாடிட அங்கமெல்லாம் விதிர்த்து நின்றது..! அரங்கன் தாம் சாற்றிக் கொண்டிருந்த மாலையினைக் களைந்து ஆழ்வாருக்குச் சாற்றி, தம் நெற்றியிலிருந்து கஸ்துாரியினை ஆழ்வாரின் நெற்றியில் திலகமிட்டு தம் பெருவீ்ட்டிற்கு அந்தாதி பாடிய ஆழ்வாரை அனுப்புகையில் எல்லோருடைய “ஹோ“வென்ற சப்தம் “ஓ“வென்று அழுவது போன்றேயிருந்தது...!

”கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை*
திண்ணமுறவே சுருங்க செப்பியே* - மண்ணவருக்குத்
தான் உபதேசிக்கைத் தலைக்கட்டினான் மாறன்*
ஆன புகழ் சேர்தன்னருள்..!”


-- Murali Battar

0 comments:

Post a Comment