Friday, March 7, 2014

போஜராஜன்



போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது.

காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு சரம சுலோகம் எழுதுவான் அல்லவா?

அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக் கேட்க முடியும்? என்ற எண்ணம் வந்துவிட்டது.

உடனே காளிதாசரை அழைத்து வரச் சொன்னான். சரம சுலோகத்தை நான் இப்போதே கேட்க வேண்டும் என்றான். என் வாக்கினாலே ஒன்று பாடினால் அப்படியே நடந்துவிடும்.

அதனால் நான் சரம சுலோகம் பாட முடியாது. முடியாதா? ராஜ உத்தரவை மீறினால் நீ நாடு கடத்தப்படுவாய்.

நல்லது மகாராஜா! நீங்கள் நன்றாக இருந்தாலே போதும். தங்கள் உத்தரவை மீறிய பிரஷ்டனாக நான் எங்காவது போய் விடுகிறேன். காளிதாசர் அந்த தேசத்தை விட்டு எங்கோ கிளம்பிவிட்டார்.

பைத்தியக்காரப் பிச்சைக்காரனைப் போல், சன்னியாசியைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்தார்.

போஜராஜன், காளிதாசரைக் கண்டு பிடிக்க மாறுவேடம் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். ஒருநாள் இவர்கள் இரண்டு பேரும் சந்திக்கும் சந்தர்ப்பம் வந்துவிட்டது.

இவன்தான் காளிதாசன் என்று போஜன் தெரிந்துகொண்டு விட்டான். நீ எந்த ஊர்? என்று சன்னியாசி கேட்டான்.

போஜன் பொய் சொல்லவில்லை. நான் இருக்கிறது தாரா நகரம். அங்கிருந்துதான் வருகிறேன் என்று சொல்லி விட்டான்.

போஜராஜாவின் நகரம் தாரா நகரம். அதனாலே, போஜ ராஜா சவுக்கியமாக இருக்கிறாரா? என்று காளிதாசர் கேட்டார்.

இதுதான் சமயம், இவன் வாயினாலேயே சரம சுலோகத்தைக் கேட்க என்று போஜராஜாவுக்குத் தோன்றிவிட்டது.

அதுவா, அதை ஏன் கேட்கிறாய்? அவர் செத்துப் போய் இன்று ஆறாம் நாள் என்று மிக்க துக்கத்தோடு சொல்வது போலச் சொன்னான்.

உடனேயே காளிதாசர் ஒரு சுலோகம் பாடி விட்டார். பாட்டை காளிதாசர் சொன்னாரோ இல்லையோ, அந்த குடுகுடுப்பைக்காரன் போஜராஜா அப்படியே செத்து விழுந்து விட்டான்.

ஐயோ, நீயேதானா போஜராஜன்? என்று கவி மிகவும் துக்கப்பட்டார்.

சரஸ்வதி ஆவிர்ப்பவித்து, நடந்தது நடந்ததுதான். முன்பு பாடியதை வேண்டுமானால் மாற்றிப் பாடு. உனக்காக அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை உயிர் கொடுக்கிறேன் என்று அனுக்கிரகம் செய்தாள்.

காளிதாசர் தாம் முன்பு பாடிய பாட்டை அப்படியே திருப்பிப் பாடினார். போஜராஜன் கண் விழித்து எழுந்தான்.

காளிதாசர், ராஜா! இப்படிச் செய்து விட்டீர்களே! இன்னும் மூன்றே முக்கால் நாழிகைதான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று துக்கப்பட்டபோது, நான் இறந்து போனால் என்ன? இறந்து போவதற்கு முன்னால் உன் வாக்கிலிருந்து அந்த அமிர்தத்தைக் கேட்டேனே!

இன்னும் மூன்றே முக்கால் நாழிகை இருக்கிறது. ராம சரித்திரத்தையே அந்தக் காலத்துக்குள் பாடி விடுவோம் என்றான் போஜன்.

உடனே காளிதாசரும் போஜனும் ராமாயணத்தைப் பாடினார்கள். அதற்கு போஜ சம்பூ என்று பெயர்.

போஜராஜன் தனக்கு கிடைத்த மூன்றே முக்கால் நாழிகையை வீண் பண்ணாமல் செய்த காரியம் ஒன்றுதான் இன்றைக்கும் நாம் அவனை நினைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.


Thanks to Indra Srinivasan for this article.

0 comments:

Post a Comment