Tuesday, March 11, 2014

எம பயம் நீங்கும் திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் - மனத்துக்கினியான்இக்ஷ்வாகு குலத்தில் உதித்த அரசன் துந்துமாரன். பக்தி சிரத்தை எல்லாம் கொண்ட அவனுக்கு நெடுநாட்களுக்குப் பின்னர் ஸ்வேதன் என்ற மகன் பிறந்தான்.

பிள்ளைச் செல்வம் என்று கொஞ்சி விளையாடி வருகையில், திடீரென ஒரு செய்தி அவனை நிலைகுலையச் செய்கிறது.

ஸ்வேதனின் ஜாதகத்தை ஆராய்ந்த வசிஷ்ட முனிவர், ஸ்வேதன் அவனது ஒன்பதாவது வயதில் அகால மரணம் அடைவான் என்றார்.

அரசன் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தாள் பணிந்தான்.

அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்தால் நிச்சயம் தகுந்த பலன் கிடைக்கும் என்றார்.

ரிஷியின் வாக்கை சிரமேற்கொண்ட அரசன், வசிஷ்டரிடம் இருந்து கேட்டறிந்த நரஸிம்ஹ மிருத்யுஞ்சய மந்திரத்தை ஸ்வேதனுக்கு உபதேசித்து, அந்தப் பொய்கையில் நீராடி தவம் மேற்கொள்ளச் சொன்னான்.

இவ்வாறு ஸ்ரீனிவாசப் பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் மந்திரத்தைக் கூறிவந்தான் ஸ்வேதன்.

ஸ்வேதனின் தவத்துக்கு மனம் இரங்கிய பெருமாள், ""ஸ்வேதா நரசிம்ம மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்ததால், நீ சிரஞ்சீவித்துவம் அடைவாய்.

மேலும், எவனொருவன் இங்கே ஒருமுகப்பட்டு எட்டாயிரம் முறை இந்த மந்திரத்தைக் கூறுகிறானோ அவனுக்கு எம பயம் இருக்காது'' என்று வாக்களித்தார்.

இவ்வாறு ஸ்வேதன் என்ற மன்னனுக்கு அருள் புரிந்த தலம் இது. இவ்வகையில், வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் தலமாக இது திகழ்கிறது.

ஸ்வேதம் என்றால் வெளுப்பு என்று பொருள். ஸ்வேத மன்னனின் பெயரை வைத்து இந்தத் திருத்தலத்துக்கு திருவெள்ளக் குளம் என்று பெயர் ஏற்பட்டது.

சோழமண்டலத்தில் தென்திசைக்குத் திலகமாய்த் திகழும் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றுத் திகழும் இந்தத் தலத்தை திருமங்கை ஆழ்வார் "திருவெள்ளக்குளத்துள் அண்ணா' என்றும் "திருவெள்ளக் குளத்துள் எந்தாய்' என்றும், "பூவார் திருமாமகள் புல்கிய மார்பா, தேவா திருவெள்ளக்குளத்துறைவானே' என்றும் பலவாறு போற்றிப் பாடியுள்ளார்.

இந்தத் தலத்துக்கு உள்ள சிறப்பு, திருமங்கையாழ்வாரை மிகச் சிறந்த வைணவராகவும் ஆழ்வாராகவும் உருப்பெறச் செய்த குமுதவல்லி அவதரித்த தலம் இது என்பதே.

சுமங்கலை என்ற தேவகன்னி, தன் தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்து வந்தாள்.

அப்போது, கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம் செய்தாள்.

கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்தார். அவர் சுமங்கலையை நோக்கி, ""தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப் பிறந்து, ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய்'' என்று சபித்தார்.

இந்த சாப வார்த்தையைக் கேட்ட அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.

கபில முனிவரோ அவளை நோக்கி, நீ திருமங்கை மன்னனின் மனைவியாகி, அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி, அவரை திருமாலின் நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்து, அதனால் உன் குறை தீர்ந்து, உன் பொன்னாட்டை அடைவாயாக என்று அருள் புரிந்தார்.

கபில முனிவருடைய சாபத்தின்படி,சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும் பிறப்பிடமாகவும் கொண்டு, அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.

அந்நேரம், திருமாலடியார் ஒருவர், குழந்தையைக் கண்டார். தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் அளித்தார். அக்குழந்தைக்கு, குமுதவல்லி என்னும் பெயரிட்டனர்.

குமுதவல்லி, திருமணப் பருவம் எய்தினாள். அவளைத் தனக்குத் திருமணம் செய்து தர விண்ணப்பித்தார் மன்னர்.

ஆனால் குமுதவல்லியாரோ, திருவிலச்சினையும், திருநாமமும் உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன் என்று மறுத்துரைத்தாள்.

இதைக்கேட்ட அவர், திருநறையூரில் நம்பி திருமுன்பே சென்றார். திருவிலச்சினை தரித்தார். பன்னிரண்டு திருநாமங்களையும் சாத்திக் கொண்டு வந்தார்.

அதன் பின்னரும் ஒரு வருட காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களுக்கு அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்று நிறைவேற்றினால், உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.

திருமங்கை மன்னரும் அதற்கு இசைந்தார். அதன்பின் அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு மணம் செய்து கொடுத்தார்கள்.

பின்னாளில் சிறந்த வைணவராகவும் ஆழ்வார் ஆகவும் திருமங்கையாழ்வார் திகழ, குமுதவல்லி நாச்சியாரின் இந்த நிபந்தனைகளே காரணமாயின.

வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம் இது.

திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் அண்ணா என விளித்துப் பாசுரம் பாடியுள்ளார்.

திருப்பதியில் உள்ள பெருமாளையும் இந்தத் தலத்துப் பெருமானையும்தான். திருமங்கையாழ்வார் தலயாத்திரை சென்று பல திவ்ய தேச பெருமான்களைப் பாடினார்.

அவ்வாறு செல்கையில், திருப்பதிக்கும் முன்பே இந்தத் தலத்துப் பெருமானைத்தான் அண்ணா என விளித்துப் பாடினார்.

எனவே இவர் திருப்பதிப் பெருமானுக்கும் அண்ணன் ஆனாராம். இங்கே உள்ள மூலவரின் திருநாமம் அண்ணன் பெருமாள் என்பது.

மூலவருக்கு கண்ணன் நாராயணன் என்றும் பெயருண்டு. உற்ஸவர் ஸ்ரீனிவாசப் பெருமாள் என்றும், தலத்தை அண்ணன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

பெருமாள் ஸ்ரீனிவாசன், தாயார் அலர்மேல் மங்கை. இங்கே குமுதவல்லி நாச்சியார் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

மூலவர் பெருமாள் இங்கே கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

மூலவர் சந்நிதி விமானம் தத்வத்யோதக விமானம் எனப்படுகிறது. வில்வம், பரசு தல விருட்சமாகவும், வெள்ளக்குள தீர்த்தம் தல தீர்த்தமாகவும் திகழ்கிறது.

பிரார்த்தனை: சிறந்த பிரார்த்தனை தலமான இங்கே அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் என்று, பெரியவர்கள் செய்து கொள்கிறார்கள்.

திருமணத் தடை நீங்கவும், எம பயம் நீங்கவும் இங்கே சிறப்பு வழிபாடுகள் உண்டு. துலாபாரம் காணிக்கை கொடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள்.


Thanks to Indra Srinivasan for sharing this article.

0 comments:

Post a Comment