Tuesday, March 4, 2014

உலகை உய்விக்க வந்த உத்தமர்ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் எவ்வெப்போது தேவையோ அவ்வப்போது காலம் கொடுத்த கொடையாக உலகின் துயரகல உத்தமர்கள் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தி நாட்டை நன்னெறியில் நடத்தி நடமாடும் தெய்வங்களாய் வாழ்ந்து மறைந்தனர் என்பது சரித்திரம் கண்ட உண்மை.

இங்ஙனம் உலகை உய்விக்க வந்த உத்தமர்களுள் வைணவர் உள்ளங்களில் முதலிடம் பெரும்
மஹான்,

* ‘இளையாழ்வார்’ என்று பெரிய திருமலை நம்பிகளாலும்,
* ‘பூதபுரீசர்’ என்று ஆதிகேசவப் பெருமாளாலும்,
* ‘ஆம் முதல்வன் இவன்’ என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்,
* ‘எதிராஜர்’ என்றும், ‘இராமானுஜ முனி’ என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும்,
* ‘உடையவர்’ என்று பெரிய பெருமாளாலும்,
* ‘எம்பெருமானார்’ என்று திருக்கோட்டியூர் நம்பிகளாலும்,
* ‘திருப்பாவை ஜீயர்’ என்று பெரிய நம்பிகளாலும்,
* ‘இலட்சுமண முனி’ என்று திருவரங்கப் பெருமாளரையராலும்,

* ‘சடகோபன் பொன்னடி’ என்று திருமாலையாண்டானாலும்,
* ‘ஸ்ரீ பாஷ்யக்காரர்’ என்று கலைமகளாலும்,
* ‘தேசிகேந்திரன்’ என்று திருவேங்கடமுடையானாலும்,
* ‘கோயில் அண்ணன்’ என்று கோதை நாச்சியாராலும்
அழைக்கப்பட்ட, விண்ணரசை மண்ணவர்க்கு வாங்கித் தரும் பொருட்டு விண்ணகரம் விட்டு மண்ணகரம் வந்த விசிஷ்டாத்வைத சித்தாந்தக் காவலரும், ஈடு இணையற்ற ஜகதாசாரியருமான பெரும்பூதூர் வள்ளல் நம் ‘இராமானுசர்’.
காலமும் மனிதகுலமும் மறக்க முடியாத, மறக்க இயலாத, மறுக்க ஒண்ணாத கலியிருள் நீக்கிய யுக புருஷர் இராமானுசர்.

பல அவதாரங்களில் பகவானும் சாதியாத பல அருட்செயல்களை ஞானக்கடலாம் நல்லார்பரவும் இராமானுசர் தமது ஒரு பிறவியிலேயே சாதித்துள்ளார்.
மஹான் இராமானுசர் தகைய ஒண்ணாத தத்துவ தரிசி.

சாத்வீக நெறி பரப்பிய சத்திய சீலர். மாசு மறுவற்ற ஆத்மகுணச் செம்மல். பூரண ஞானம் பொலிவுற்ற வடிவழகர்.

சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோர். அன்பினால் பகை வென்ற அருட்செல்வர். ஆழ்வார்களின் அடியொற்றிப் பூவுலகில் வைகுந்த வாழ்வளித்த ஆசார்ய குலதிலகம்.

இறைவன் உறைவிடங்களைச் சீராகச் செப்பனிட்ட திறன்மிக்க அறங்காவலர். அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானம் மிக்க சம நோக்குள்ள சமுதயவாதி.

“உலகம் சத்தியமல்ல. பொய்!” என்ற போலி வேதாந்த மாயையை முறியடித்து மண்ணையும் விண்ணையும் சத்தியமாக்கியவர் புண்ணியர் வாக்கிற்பிரியா, வைணவர்களின் இதயக்கனியாம் அண்ணல் இராமானுசர்.

வேதம் தமிழ்செய் மாறன் மெய்வழியிலே தம் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, பக்தியோடும், பாகவத நெறியோடும் தமிழ்ப் பாசுரப் பயிற்சிப் பண்ணையைப் பேணிக் காத்து,

தமிழ் வளத்தைப் பெருக்கி,விழுதுவிட்டிருந்த வைணவம் ஒருநாளும் பழுதுபட்டிருக்காமல் பார்த்தவர்,
“பண்தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனிவேழம்”
என்றும்,

“கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு தனஉள்ளம் தடித்து அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன்”

என்றும் அழைக்கப்பட்ட, தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் வைணவத்தின் வளர்ப்புத் தாயாம் நம் இராமானுசர்.

பகவானுடைய கைங்கர்யங்களிலே எல்லாப் பணிகளும் ஒரே சிறப்புடைத்தன எனும் உளப்பாங்கிற்கு ஏற்பத் தமது வாழ்க்கையை வகுத்துக்கொண்டு, தீர்த்தக் கைங்கர்யம் செய்தல் முதல் பாஷ்யங்கள் செய்தல் வரை அனைத்தையுமே பகவானுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தவர் பல்கலையோர் தாம்மன்ன வந்த பரம பாகவதராகிய இராமானுசர்.

பால்முற்றத் தலைசாயும் பயிர்போலே பக்தி முற்ற முற்ற ஆணவம் தலைசாய்ந்து உலகியல் பற்று நீங்கப் பெற்ற மஹான் எண்ணருங்கீர்த்தி இராமானுசர்.

வைதீகம் தலைதூக்கி நின்ற காலத்தில் தெருக்குலத்தார் என்று உலகோர் சொன்னவர்களைத் திருக்குலத்தார் ஆக்கி உயிர்க்குலம் அனைத்தும் திருநாடு என்னும் பரமபதம் செல்லச் சரணாகதி என்னும் பொதுநெறியைப் பரப்பிய வேந்தர் தொண்டர் குலாவும் இராமானுசர்.

மண்ணகரைத் தாண்டி மற்றொரு வாழ்வு நமக்கு விண்ணகரில் உளதென்று உணர்ந்து, விருப்பமுள்ள உலகமக்கள் அனைவரும் தடையின்றித் திருநாட்டிற்குச் செல்வதற்காக விண்ணகரின் நிலைக்கதவம் தன்னை விரைந்தன்று திறந்து வைத்த உத்தமர் திக்குற்றகீர்த்தி இராமானுசர்.

ஞானமழை பொழிந்து வைணவத்தை வையப் பொதுவாய் வைத்து, 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்த குணம்திகழ்க் கொண்டல் இராமானுச வேழத்தைப் போன்ற ஆசார்யர் அவருக்கு முன்னும் கிடையாது பின்னும் கிடையாது என்று சொல்லும் வண்ணம் திகழ்ந்தவர் தரணியில் தமக்கு ஒப்புவமையில்லாத் தனியராம் இன்புற்றகீர்த்தி இராமானுசர்.

ஆசார்யர்கள் என்னும் நவரத்தின மாலையிலே நடுநாயகமாய் உள்ள மணி போன்ற பெருமையுடையவர் கதிரவனைவிட ஒளி மிகுந்துள்ள எதிராசர் என்னும் நம் உடையவர்.

இதனை,
“அமுநா தபநாதி சாயி பூம்நா
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: /
மஹதீ குரு பங்க்தி ஹாரா யஷ்டி:
விபுதாநாம் ஹிருதயங்கமா விபாதி //”
-(யதிராஜ சப்ததி-15)
என்பார் ஸ்வாமி வேதாந்த தேசிகன்.

ஆசார்யர் அறிவுறுத்துகின்ற திருப்பாதையில் சென்று திருநாடு சேர்ந்தால் பிறகு ஒரு கருப்பாதையில் கால்வைக்க நேராது என்பதை உணர்த்த 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த மஹான் இராமானுசரின் வாழ்க்கை அவருக்கு முன்னும் பின்னும் அவதரித்த பல மஹான்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய வரலாறு.

அவருக்கு முற்பட்ட பூர்வாசார்யர்கள் அவரது திருமுடி சம்பந்தத்தாலும், அவருக்குப் பிற்ப்பட்ட ஆசார்யர்கள் அவரது திருவடி சம்பந்தத்தாலும் உயந்தார்கள்.

நல்லார் பரவும் இராமானுசரைக் கற்றார் காமுறு சீலர் ஆனார்; கண்டு மகிழ்ந்தார் கணக்கிலடங்கார்;

அண்டி உயந்தோர் அளவற்றோர்; பாதம் பணிந்தோர் பாரில் சிறந்தார்.

இராம, கிருஷ்ண சரிதங்களைப் போலவே தேனும், பாலும், கன்னலும், அமுதுமாய இராமானுச சரிதையும் எவரையும் ஈர்க்கவல்லது. உலகமெல்லாம் அன்றும்,

இன்றும், என்றும் போற்றப்பட்டு வருகின்ற, கிருத யுகத்தில் ஆதிசேஷனாகவும், திரேதா யுகத்தில் லக்ஷ்மணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும், கலி யுகத்தில் இராமானுசராகவும் அவதரித்த அஸ்தமனமில்லாத சூரியனாம் இராமானுசருடைய பெருமை சிந்தைக்கும், சொல்லுக்கும் அப்பாற்பட்டதாகும்.

பிரபத்தி (சரணாகதி நெறி)யையே பிரதானமாகக் கொண்டு இன்றளவும் விசிஷ்டாத்வைதத்தை வழிநடத்தும் மஹான் இராமானுசரின் வாழ்க்கையிலிருந்து இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்! ஏராளம்!

சமயப் புரட்சி என்னும் இமயப் புரட்சி செய்த வைணவப் பெருங்கடல், வைணவத்தின் வைப்புநிதியாம் வள்ளல் இராமானுசரின் வரலாறு ஒரு காலப் பெட்டகம்! வைணவம் யாண்டும் போற்றும் ஞான ஏடு!

நமது உள்ளமாகிய ஏரியைத் தூர்வாரி வைத்துக் கொள்வோம்! காரேய் கருணை இராமானுசரின் அருள் மழையால் அது நிரம்பி வழியட்டும்!
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!

“பற்பமெ னத்திகழ் பைங்கழல் உந்தன் பல்லவ மேவிரலும்,
பாவன மாகிய பைந்துவ ராடை பதிந்த மருங்கழகும்,
முப்புரி நூலோடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்,
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல்நி லாவழகும்,

கற்பக மேவிழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்,
காரிசு தன்கழல் சூடிய முடியும், கனநற் சிகைமுடியும்,
எப்பொழு தும்எதி ராசன் வடிவழகு என்இத யத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
- (எம்பார்)

அடியேன்,
ஆர். வீ. ஸ்வாமி
(ரங்கநாத ராமானுஜ தாசன்)

Thanks to Indra Srinivasan for sharing this post.

3 comments:

Post a Comment