Wednesday, February 26, 2014

பார் ஆண்ட பாதுகை

தன்னுடைய தாத்தா வீட்டில் பரதன் ஏதோ கவலையுடனேயே இருந்தான். மனைவி மாண்டவி அவன் முகத்தில் ஓடும் வேதனை ரேகைகளைப் பார்த்தாள்.

அவன் உள்ளத்தில் அலையாகப் புரண்டு, புரண்டு அவனை அலைக்கழிக்கும் சோக சிந்தனை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும், அதற்குத் தன்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமாவெனவும் அவள் யோசித்தாள்.

“அயோத்தியில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமென என் உள்ளுணர்வு சொல்கிறது,”பரதன் குரலில் கவலை.

“அயோத்தியில் அசம்பாவிதமா..?” -சற்றே நகைத்தபடி கேட்டாள், மாண்டவி. “தங்கள் தந்தையார் தசரத சக்கரவர்த்தியின் ஆட்சி அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதோடு, தங்கள் அருமை தமையனார் ராமன், தந்தைக்கு ராஜ பரிபாலனத்தில் உறுதுணையாக இருக்கிறார். இவர்களை மீறி அசம்பாவிதம் ஏதேனும் நடைபெற்று விடமுடியுமா அங்கே?”
“உண்மைதான்,”

சற்றே ஆறுதலடைய முற்பட்டான் பரதன். ஆனாலும், அவன் மனம் மிகவும் சஞ்சலப்பட்டுக் கிடந்தது. “எதுவானாலும் சரி, நாம் இப்போதே அயோத்திக்குச் செல்ல வேண்டும்...”-அவன் தன் தாத்தா நாடான கைகேயத்தை விட்டுப் புறப்படத் தயாரானான்.

மாண்டவியும் அப்போதே அவனுடைய எண்ணத்தை செயல்படுத்தத் துவங்கினாள். மாண்டவிக்கு பரதனுடைய மனக் குழப்பம் தேவையற்றது என்றுதான் தோன்றியது. ஆனாலும், அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளவோ, மாற்று யோசனை சொல்லவோ அவள் தயங்கினாள்.

அதே நேரம் ஒரு தகவல் வந்தது. அதிர்ச்சியூட்டிய தகவல். ‘‘அயோத்தியைத் துறந்து ராமன் காட்டிற்குப் போகிறான். அவ்வாறு அவரைக் காட்டிற்கு விரட்டியது வேறு யாருமல்ல, பரதனின் தாயான கைகேயிதான்! ராமனைப் பிரிய இயலாத சோகத்தில் தசரதன் உயிர் நீத்தார்...’’

உடலெங்கும் பதறியது பரதனுக்கு. ‘‘என்னக் கொடுமை இது! அருமை அண்ணன் ராமன் காட்டிற்குப் போவதா?

காட்டிலுள்ள கொடிய விலங்குகளும், அங்கே தவமியற்றும் ஞானிகளும் ராமனை முன்னிட்டுத் தாங்களும் அயோத்தியில் வாழ விரும்பும்போது, அத்தகைய அமைதிப் பூங்காவான அயோத்தியை விட்டு, அதற்குக் காரணமான ராமன் நீங்கினானா? அதற்குத் தன் தாய்தான் காரணமா? சிறிதும் முறையில்லையே இது...’’

‘’அது மட்டுமல்ல,’’செய்தி தாங்கி வந்தவன் கூடுதல் தகவல் தந்தான். ‘‘ராமன் விட்டுச் சென்ற, சக்கரவர்த்தி தசரதன் அமர்ந்த சிம்மாசனத்தை பரதன் அலங்கரிக்க வேண்டும்!’’

அவ்வளவுதான். கொதித்தெழுந்தான் பரதன். ‘‘யாரைக் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு இது? முறைப்படி தந்தைக்குப் பிறகு மூத்த தனயன்தான் அரியணை ஏறவேண்டும்.

அண்ணன் இருக்கும்போது தம்பி அந்தப் பதவியைப் பறிப்பது எந்த உலக நியாயம்? இதை அயோத்தி மக்கள்தான் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அயோத்தியின் அரசவை எப்படி ஒப்புதல் கொடுத்தது..?’’

புயலாகப் புறப்பட்டான் பரதன். அதே வேகத்தில், தொடர்ந்து செல்லும் சருகாக மனைவி மாண்டவி.

அயோத்தியில் நிலை கொண்டது அந்தப் புயல். அரண்மனையே அந்த உக்கிரத்தில் கிடுகிடுத்தது.

சம்பிரதாயங்களையெல்லாம் மீறி, தாய் கைகேயியின் மாளிகைக்குச் சென்றான் பரதன். இந்தச் சூழலை எதிர்பார்த்தவள்போல, கைகேயி அமைதியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ராஜாங்க இறுமாப்பு இருந்ததை பரதன் கவனித்தான். பரம்பரை அரச திமிர் மிளிர்ந்ததைக் கண்டான். அந்த ஆணவம்தான் எளிமையான குடும்பத்திலிருந்து வந்த கோசலையையும், அவரது மகனான ராமனையும் துச்சமாக நினைக்கத் தோன்றியதா?

இதற்குத் தந்தையாரும் எப்படி உடன்பட்டார்? ஒரு பலவீனமான கட்டத்தில், ஒரு போரில் தன் வெற்றிக்குக் காரணமாக இருந்த பிரமிப்பில் இரண்டு வரங்களை தன் மனைவியான கைகேயிக்கு அவர் அளித்திருக்கலாம். ஆனால், அந்த வரங்கள் இப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்படும்போது அவர் ஏன் மறுதலிக்கவில்லை?

வாக்குக் கொடுத்துவிட்ட நாணயம் அவரைக் கட்டிப் போட்டுவிட்டதா? அவர் மன்றாடிக் கேட்டும் தாயார் மனம் இளகவில்லையாமே! அந்த அளவுக்கு அண்ணல் ராமன் மீது கைகேயிக்கு வெறுப்பு எப்படி வளர்ந்தது? பிறந்து, வளர்ந்து, எங்களுக்குத் திருமணமும் ஆன பிறகும் ராமனையே பிற மூன்று தம்பிகளுக்கும் உதாரண புருஷனாக அடையாளம் காட்டி வந்த அன்னைக்கு திடீரென எப்படி இவ்வாறு புத்தி பேதலித்துப் போயிற்று?

இப்படி அதிரடி வரம் கோரும் அவசியம் அன்னைக்கு ஏன் வந்தது? ராமனைப் பிரிந்ததால் தான் தசரதனின் உயிர் பிரிந்தது என்பதை அவள் உளமாற உணர்கிறாளா?

அதற்கான வருத்த சாயல் எதுவும் அவள் முகத்தில் நிழலாடவில்லையே!

மாண்டவி தன் கணவனுடைய உள்ளத்தைப் படித்தாள். அதில் உருவான வெப்பம் அகிலத்தையே தகிக்குமோவென பயந்தாள். மெல்ல அவனுடைய கரம் தொட்டாள். அது அவனுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தியதே தவிர, சிறிதளவும் குறைக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம், கைகேயி எந்த உணர்வையும் காட்டாமல், இறுகிய முகத்தவளாய், தன் எண்ணம் ஈடேறிய நிறைவினளாய் காட்சி தந்ததுதான்.

தாயிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தான் பரதன். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்தானே? தான் பெரிதும் நேசித்த, தனக்கு உதாரண புருஷனாகத் தான் கருதிய ராமனை, எந்தத் தாய் காட்டிற்கு விரட்டியடித்தாளோ, அந்தத் தாயின் கண் முன்னாலேயே இதே அரியாசனத்தில் ராமனை அமர்த்தி நான் அழகு பார்க்கிறேன்.

ராமன் கானகம் ஏக வேண்டும், நான் அரசாள வேண்டும் என்ற உன் இரு வரங்களும் அப்போது பொய்த்துதானே போகும்? அப்படி நிறைவேறாத வரங்களை மீண்டும் மீட்க கைகேயி, தசரதனை எங்கே போய்த் தேடுவாள்?

வரம் கேட்டவளும், அளித்தவரும் இருவருமே நிறைவேற்ற முடியாதபடி, அந்த வரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் என்னவாகும்?

உடனே தன் அரச உடையை துறந்தான் பரதன். தானும் மரவுறி தரித்தான். காட்டை நோக்கிப் புறப்பட்டான். கைகேயியின் பார்வையில் ஒளிர்ந்த அர்த்தத்தை, பரதன் தன் கோணத்தில் எதிர்மறையாகவே புரிந்து கொண்டான்.

‘ராமன் வரமாட்டான். நீ ஏமாறப் போகிறாய்’ என்று எகத்தாளமாகத் தெரிந்தது அவனுக்கு. ஆனால், பிற எல்லோருக்குமே பரதன் அவ்வாறு கானகம் செல்வதில் ஆவல் பொங்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பரதன், ராமனை அயோத்திக்கு அழைத்து வந்துவிடுவான்! அதனாலேயே அவனை தடுப்பவர் யாருமில்லை.

காட்டில் சிறிது தூரம் சென்றவுடனேயே கால் நொந்தது பரதனுக்கு. தன்னைச் சுற்றிலும் அரசப் பரிவாரங்கள் இருந்தாலும், குதிரை, யானை, பல்லக்கு என்ற எந்த வாகன சௌகரியத்தையும் ஏற்காமல், அண்ணன் எவ்வாறு கால் நோக நடந்திருப்பானோ அதே மாதிரி தானும் செல்லவே அவன் விரும்பினான்.

அது மட்டுமல்ல, அண்ணல் பாதம் பதிந்த தரையில், தன் பாதுகை படக்கூடாது என்று கருதிய அவன் வெற்றுப் பாதங்களாலேயே வனத்தில் நடந்தான். ‘‘ராம், ராம், ராம்...’’என்று மந்திரமாக அண்ணன் திருநாமத்தை அவன் ஜபிக்க, கூடி வந்தவர்கள் அனைவரும் அதனைப் பின் மொழிந்தனர்.

தூரத்தே புரண்டெழுந்த புழுதியைக் கண்ட லட்சுமணன் திடுக்கிட்டான். பெருங் கூட்டமாய் வருபவர்கள் யார்? பகைவர்களோ? அண்ணனை எதிர்க்க வந்த அரக்கர்களோ? வெகுண்டெழுந்தான் அவன். வழக்கம்போல அவன் தோளைத் தொட்டு அமர்த்தினான் ராமன்.

“வருபவர்கள் யாராக இருக்கும் என்ற சந்தேகம் உன்னுடைய பிற புலன்களின் ஆற்றலை அப்படியே அமுக்கிவிட்டது, லட்சுமணா. எதையுமே எதிர்மறையாக சிந்திப்பதால் புலன்களும் பொய் சொல்லத் துவங்கிவிடும்.

பார்ப்பது, கேட்பது, நுகர்வது, பேசுவது, மெய் உணர்வது எல்லாமே தவறானதாகிவிடும். இந்தக் கூட்டத்தைப் பார்த்தாயே தவிர, அங்கிருந்து புறப்படும் ‘ராம’ ஜபத்தைக் கேட்டாயா? அந்தக் கூட்டம் நமக்கு எதிரானதல்ல, நம்மைச் சார்ந்ததுதான் என்பதைப் புரிந்துகொள்” என்றான் ராமன்.

“அப்படியானால்... அப்படியானால் வருபவர்கள் அயோத்தி மக்களா?” -லட்சுமணன் கேட்டான்.

“அவர்களும் வருகிறார்கள். அவர்களை தலைமை ஏற்று நடத்தி வருகிறவன் பரதன்!”-ராமன் அமைதியாகச் சொன்னான்.
அவ்வளவுதான். லட்சுமணன் துள்ளி குதித்தான். “பரதனா?

உங்களை அயோத்தியை விட்டு விரட்டியது போதாதென்று இப்போது காட்டிற்கும் துரத்தி வருகிறானா? நீங்கள் நிரந்தரமாக நாடு திரும்பவே கூடாது என்று நினைத்து அதை முயற்சிக்க வருகிறானோ?”என்று கோபமாகக் கேட்டான்.

அவனை ராமன் ஆசுவாசப்படுத்துவதற்குள், ராமனை தொலை தூரத்திலேயே பார்த்துவிட்ட பரதன் பசுவை நோக்கித் தாவும் கன்றுபோல ஓடோடிச் சென்று ராமன் பாதத்தில் வீழ்ந்தான்.

கண்களிலிருந்து கண்ணீர் மாலையாகப் பெருகி, ராமனின் பாதங்களை அர்ச்சித்தது. அவனை ஆதூரத்துடன் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டான் ராமன். “அன்னையர் மூவரும் நலமா..?”என்று அவன் ஆரம்பித்த போது, கண்ணீர் பெருக்கிய பரதனின் கண்கள் கோபத்தை அனலாகக் கொட்டின.

“நான் என் தாத்தாவின் நாட்டிற்குச் சென்றிருந்தபோது நடந்துவிட்ட கொடுமை இது. நான் அயோத்தியிலேயே இருந்திருந்தேனானால், இப்படி நடக்க விட்டிருக்கமாட்டேன்” -படபடப்புடன் பேசினான் பரதன்.

பரதன் ராமனை விரோதிக்க வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட லட்சுமணன், “அதனால்தான் உன்னை கேகய நாட்டிற்கு அனுப்பிவிட்டு, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உன் தாயார் நம் அண்ணனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டார்” என்று தன் பங்குக்கு ஆதங்கத்தை வெளியிட்டான்.

இருவரையும் அணைத்துக் கொண்டான் ராமன். “அப்படிச் சொல்லாதீர்கள். பெரியவர்கள் சொல்வதிலும், செய்வதிலும் ஏதேனும் அர்த்தம் இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு, அதனால் தோன்றும் கற்பனைக்கேற்ப அவற்றை விதவிதமாக, பெரும்பாலும் தப்பாகவே புரிந்து கொள்கிறோம்.

அப்போதே அவற்றின் அர்த்தம் புரியாவிட்டாலும் சற்று பொறுத்திருந்தால், ஏற்படும் விளைவுகள் நன்மைகளாகவே அமைவதை அறிந்து கொள்ள முடியும்’’என்று ஆறுதலளிக்க முயன்றான்.

“உங்களுடைய இந்தப் பெருந்தன்மைதான், கெடுமதி படைத்தவர்களுக்கு சலுகையாக அமைந்து விடுகிறது,”பரதன் சொன்னான். “அமைதி காக்கும் உங்களுடைய உயர் பண்பைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு மேலும், மேலும் தீமையையே செய்யும் அக்கிரமக்காரர்களை எதிர்த்து நீங்கள் ஏன் சிறு குரல் கூட கொடுக்கக்கூடாது?”

“உலகினருக்குத் தீமை விளைவிக்கும் அரக்கர்களையும், அரக்க குணமுள்ள முரடர்களையும் தாங்கள் மாய்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறீர்கள். ஆனால், பாதிப்பு உங்களுக்கே என்னும் போது தாங்கள் அமைதியாகிவிடுகிறீர்கள். ஏன்?” -லட்சுமணன் பரதனின் கருத்துக்கு ஆதரவாகப் பேசினான்.

வழக்கம்போல ராமன் அமைதிப் புன்னகை பூத்தான். “கொடுங்கோன்மையை நான் எதிர்க்கிறேன். பொதுவாக மக்களை பாதிக்கும் அராஜகத்தை எதிர்க்கிறேன்.

ஆனால், எனக்கு நேர்ந்தது எதையும் நான் அப்படிக் கருதவில்லை. காரணம், நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் ‘துன்பம்’ யாரோ மூன்றாம் மனிதரால் ஏற்பட்டதல்ல.

அது என் பெற்றோர் எனக்காக விதித்தது. அந்த ‘ஆணை’க்கு அடிபணிவது என் கடமை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையிலான எந்த நிகழ்வையும் நான் உணர்வுபூர்வமாக அணுகுவதில்லை.

முந்தின நாள் எனக்குப் பட்டாபிஷேகம் என்று சொல்லப்பட்டபோது நான் எந்த உணர்வோடு இருந்தேனோ அதே உணர்வோடுதான் நான் கானகம் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டபோதும் இருந்தேன்.

அரியாசனத்தில் அமர்வதற்கும், கானகத்தில் மரத்தடியில் அமர்வதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம், பெரியவர்கள் சொல்லும் எந்த சொல்லும், செய்யும் எந்த செயலும் நம் நன்மைக்காகத்தான் என்பதை நான் பரிபூரணமாக நம்புவதுதான்...”

லட்சுமணனும் பரதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தன் எண்ணம் ஈடேறாதோ என்ற விரக்தி, பரதனின் மனதில் சிலந்தி வலையாய் படர்ந்தது.

தன் தாயிடம் சபதமிட்டு வந்திருக்கிறோமே, அது நிறைவேறாதா? ராஜ தோரணையுடன் விளங்க வேண்டிய ராமனை இப்படி பாதி உடல் வெளியே தெரியும்படி மரவுறி தரிக்கச் செய்த கொடுமைக்கு தண்டனை அளிக்க நினைத்தேனே அது முடியாதா?

வேளை தவறாமல் அறுசுவை உணவைப் புசித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணி வந்த ராஜகுமாரன் இப்படி காட்டில் காயையும், கனியையும் உண்ண வேண்டிய அவலத்தை உண்டாக்கியதற்கு பதிலடி கொடுக்க விழைந்தேனே, அது ஈடேறுமா?

சாளரங்கள் வழியே இளந்தென்றல் வீசி தாலாட்ட, பஞ்சு மஞ்சத்தில் படுத்து, களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறவேண்டிய சக்கரவர்த்தித் திருமகனை இப்படி கானகத்தில் அலையவிட்டு, மடித்து வைத்த தன் கையையே தலையணையாக்கிக் குடிலில் படுக்க வைத்த அக்கிரமத்துக்கு விடையளிக்க விரும்பிய தன் எண்ணம் செயல் வடிவம் பெறாதா?

“அண்ணா, யாருக்காக என் தாயார் வரங்களைக் கேட்டாளோ, அந்த நபர் - நானே... நேரில் வந்து கேட்கிறேன் என்றால் அந்த வரம் காலாவதியானதாகத்தானே அர்த்தம்?

நான் அரச பட்டத்தை ஏற்க வேண்டும் என்பதற்காக தங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிய வைத்தது அந்த வரம். ஆனால், இப்போது நானே அந்த பட்டத்தை ஏற்க மறுக்கிறேன். இப்படி ஒரு வரத்தால் பயனடைவதில் எனக்கு உடன்பாடில்லை.

உண்மையான வாரிசின் நியாயமான பதவி பறிக்கப்பட நானே காரணமாக இருக்க முடியாது, எனக்கு அதில் விருப்பமில்லை. என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடன் இப்போதே அயோத்திக்குத் திரும்புங்கள். ராஜ கிரீடம் சூடிக் கொள்ளுங்கள். அயோத்தி அரச குடும்பம் மட்டுமல்ல அயோத்தி மக்கள் அனைவரது விருப்பத்தையும் நிறைவேற்றுங்கள். கோசலை ராமன் ராஜா ராமனாக வேண்டும்...”மன்றாடிக் கேட்டான் பரதன்.

சுற்றியிருந்த அனைவரும் ராமனின் சம்மதமான தலையசைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரையும் பார்த்த ராமன், பரதனிடம் சொன்னான், “உன்னுடைய அன்பால் நான் கரைகிறேன் பரதா. மூத்தவனிருக்க இளையவன் அரச பட்டம் ஏற்பது பொருந்தாது என்ற உன் அரசியல் எனக்குப் புரிகிறது. ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதும் அரசியலில் ஒரு அம்சம் என்பது உனக்குத் தெரியாதா என்ன?

பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசிப்பதாகவும், உன்னை தசரதனின் அரசியல் வாரிசாக ஆக்குவதற்கு சம்மதிப்பதாக வும் நான் கொடுத்த வாக்கு பொய்த்துவிடக்கூடாது, இல்லையா? உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் உன்னுடன் வருவதாகவே வைத்துக் கொள்வோம்.

அது தாயார் கைகேயிக்கு நான் செய்யும் வாக்கு துரோகம் என்பது மட்டுமல்ல, அவர்களை கேலி செய்வது போலவும் ஆகும். இப்போதைய உன் மனநிலைப்படி, அப்படி நான் நடந்து கொண்டால் நீ கைகேயியை உன் தாயார் என்றும் பாராமல் கேலி செய்து துன்புறுத்துவாய்.

உன்னைப் பார்த்து பிற எல்லோரும் அன்னையை கிண்டல் செய்து சொல்லம்புகளால் தாக்குவார்கள். ‘என்னாயிற்று உன் வரம்? யாருக்காக நீ வரம் கேட்டாயோ அந்த பரதனே இப்போது ராமனை அழைத்து வந்துவிட்டானே, இப்போது உன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வாய்?’ என்றெல்லாம் கேட்டு வேதனைப்படுத்துவார்கள்.

ஒரு ராஜமாதங்கி, சக்கரவர்த்தினி இப்படி அவமானப்படுவது தகுமா? அதற்கு நீயும் நானும் காரணமாவது முறையா? உன் கோபம் பிற எல்லோருக்கும் வக்கர மனதைக் கொடுப்பது சரிதானா?

‘உன்னால் நல்லது எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தீயதைச் செய்யாமல் இரு’ என்பார்களே, அந்த கொள்கைப்படி நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா?

ஒரு பாதிப்பு நிகழ்ந்துவிட்டது என்றால் அதற்கு மாற்று, அதற்குக் காரணமானவர்களை பாதிப்படைய வைப்பதா? உடலில் வலி ஏற்படச் செய்வதுதான் வன்முறை என்றில்லை, யாருடைய உள்ளத்திலும் வேதனை தோன்ற வைத்தால் அதுவும் வன்முறைதான். அதற்கு உன்னையும், உன் மூலமாக என்னையும் காரணமாக்கி விடாதே...”

ராமன் பேசப்பேச எல்லோருக்கும் அவன் மீதான அபிமானம் அதிகரித்தது. அதே சமயம் இத்தகைய உத்தம புருஷனை பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பிய கைகேயியின் மீதான வெறுப்பையும் அதிகரிக்க வைத்தது.

இவர்களில், ராமன் என்ற பெருந்தகையாளனை, தங்கள் தமையனை, கைகேயி வேதனைக் குள்ளாக்கியதை லட்சுமணனாலும், பரதனாலும் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தன் முயற்சியில் தான் தோற்றுவிட்டாலும், தன் கொள்கையிலிருந்து மாறாதிருப்பதில் உறுதியானான் ராமன். தான் அயோத்திக்கு வரவே முடியாது என்று தீர்மானமாக தெரிவித்துவிட்டான்.

வேறு வழியில்லை. வெற்றுக் கையனாகத்தான் பரதன் திரும்ப வேண்டும். அங்கே கைகேயி காத்திருப்பாள். இளக்காரமாகப் புன்னகைப்பாள். ‘என்ன ஆச்சு?’என்று மடக்கிய கையில் விரல்களைப் பிரித்து எகத்தாளமாகக் கேட்பாள்.

அரசவையினரும், அயோத்தி மக்களும் அந்த கேலியில் பங்கு கொள்ளலாம். அந்த அவமானத்தை எப்படித் துடைப்பது? உள்ளம் சோர்வடைய, அதனால் உடலும் தொய்வடைய, அப்படியே ராமன் காலடியில் சரிந்தான் பரதன்.

தன் முகத்தை ராமனின் பாதத்தில் அழுந்தினான்... இதோ... ராமனின் பாதுகை. இதைக் கேட்கலாம். ராமனிடம் இதைக் கேட்கலாம்... மளமளவென்று மனசுக்குள் திட்டம் உருவானது.

“ராமா, நீங்கள்தான் வரவில்லை, தங்கள் பிரதிநிதியாக உங்கள் பாதுகையையாவது என்னுடன் அனுப்பி வைப்பீர்களா?”
-நா தழுதழுக்கக் கேட்டான் பரதன்.

உடனே வெகுண்டான் லட்சுமணன். “உன் தாயைவிட கொடுமைக்காரன் நீ. அவளாவது காட்டுக்கு அனுப்பியதோடு நின்றுவிட்டாள். நீ என்னடாவென்றால் அண்ணனின் பாதுகையைப் பறித்துக் கொண்டு, இந்த காட்டின் கல்லிலும், முள்ளிலும் பாதம் நோக அவரை நடக்க வைக்கத் துணிகிறாய்” என்று பரதன் மீது கோபம் கொண்டான்.

அவனை அமைதிப்படுத்தினான் ராமன். “பரதன் ஏமாற்றமடைய விரும்பவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் என்னை அயோத்திக்கு அழைத்துச் செல்ல நினைத்த அவன், தன் நோக்கம் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்ற ஆதங்கத்தில் என் பாதுகைகளைக் கோருகிறான்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றி வைப்பது என் கடமை. அதோடு, நீயும், சீதையும் வெற்றுக் கால்களுடன் என்னுடன் வரும்போது நான் மட்டும் பாதுகை அணிந்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனக்கு இப்படி ஒரு படிப்பினையைக் கொடுத்த பரதனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்...” என்று உள்ளம் நெகிழ்ந்த ராமன் பாதுகைகளை விட்டு நீங்கினான்.

குனிந்து அந்தப் பாதங்களை எடுத்துக் கொண்ட பரதன் அவற்றைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பிறகு லட்சுமணனை நெருங்கி, ‘‘என் தாய் கைகேயியை நான் பழிவாங்குவேன் லட்சுமணா.

இந்தப் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, தினமும் பூஜித்து, இவை என் உள்ளுணர்வுக்கு அறிவுறுத்துவதையே நான் செயல்படுத்துவேன்.

எந்த அரியாசனத்தில் ராமன் அமரக்கூடாது; நான் அமர வேண்டும் என்று என் தாய் விரும்பினாளோ, அந்த அரியாசனத்தில் இதோ நம் அண்ணனின் பாதுகைகளை அமர வைக்கப் போகிறேன். அதைப் பார்த்து அவள் எவ்வளவு வேதனைப்படுவாள், புழுங்கித் தவிப்பாள்... அந்த தண்டனை அவளுக்குப் போதும்... சரிதானே?’’ என்று கேட்டான்.

லட்சுமணன் திருப்தியுடன், முக மலர்ச்சியுடன் தலையசைத்தான்.

அயோத்தி, ராம பாதுகா பட்டாபிஷேகம் கண்டது. பரதன் தன் மனைவியுடன் தினமும் அவற்றை வணங்கி வந்தான். கைகேயிக்குத் தகுந்த தண்டனை வழங்கிவிட்டதாக இறுமாந்தான் அவன். கைகேயி மட்டும் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளுக்குதானே தெரியும், ராமனை காட்டுக்கு அனுப்பியதற்கான காரணம்!


Thanks to Indra Srinivasan for sharing the post.

2 comments:

  1. ரொம்பவும் நன்றாக இருக்கிறது . மிக்க நன்றி . தாசன் சடகோபன்

    ReplyDelete
  2. Different insight to the story. thanks for sharing

    ReplyDelete