Pages - Menu

Wednesday, July 16, 2014

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

நான் என்ன செய்துவிட்டேன்? பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’



1. அழைத்துவந்த அக்ரூரர்
தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால், கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான். பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம்முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.
வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்துவந்து, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான்.
கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும் கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.
கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டுமே? அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.
கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர். எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்துவர வேண்டினான்.
அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர். கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர். நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர். அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.
கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர். கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி, அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான்.
வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார். கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர். அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார். அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது. மேல்நோக்கிப் பார்த்தார்.
தேரில் கண்ணன் வீற்றிருந்தான். மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார். அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார்.
கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான். குவலயாபீடத்தைக் கொன்றான். மல்லர்களை எதிர்த்துக் கொன்றான். இறுதியில் கம்சனையும் வதைத்தான்.
பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர். நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர். இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,
“அழைத்து வருகிறேன் என்றேனோ
அக்ரூரரைப் போலே!”
என்று குறிப்பிட்டாள். அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார். அதனால் கொடியவர்கள் மாண்டனர். நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார். ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை, திருக்கோளூர்ப் பெண்பிள்ளை வியந்து போற்றினாள்.


Thanks to Indra Srinivasan for sharing this article.

No comments:

Post a Comment