இறைவனின் கருத்தில்தான் நிலைக்க வேண்டும், அவரோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என்று ஒரு பக்தன் ஏங்குவானானால், அது, அவனது பக்தியின் முதிர்ந்த நிலையை உணர்த்துவதாக அமையும்.
ஆனால், இறைவனே தன் பக்தனின் இருதயத்தில் வாசம் புரிய வேண்டும் என்று விரும்புகிறா னென்றால் அந்த பந்தத்தின் மாண்பை விவரிக்க வார்த்தைகள் தான் ஏது? அப்படி ஒரு பாக்கியத்தை அடைந்தவர் நம்மாழ்வார்;
அந்த பாக்கியத்தை அளித்த இறைவன், திருக்கடித்தானத்தில் உறையும், அற்புத நாராயணன்!
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், தான் அவ்வாறு நம்மாழ்வாரின் உள்ளத்தில் நிலைத்திருக்கும் வாய்ப்பைத் தந்த திருத்தலத்தையும் மறக்காமல், அந்த உதவிக்குப் பிரதி உதவியாக அந்தத் திருத்தலத்தில் அர்ச்சாவதாரமாக, பெருமாள் கோயில் கொண்டதுதான். இதனால் ஆழ்வாருக்கும் சந்தோஷம்; தலத்துக்கும் பெருமை.
கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே
-என்று பாடி மகிழ்கிறார் நம்மாழ்வார். ‘திருக்கடித்தானத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமனே என் நெஞ்சிலும் குடி கொண்டிருக்கிறான்.
(‘என் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் பரந்தாமனே திருக்கடித்தானம் கோயிலிலும் குடிகொண்டிருக்கிறான்’ என்று பெருமாள், தான் இடம் கொண்ட உண்மையான வரிசைப் படி பாடாமல், மிகுந்த தன்னடக்கத் துடன், ‘கோயிலிலிருக்கும் பெருமாளே என் நெஞ்சிலும் இருக்கிறான்’ என்று தன் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறார் நம்மாழ்வார்).
ஆனால், இதே எம்பெருமான் வைகுண்டத்திலும் கோயில் கொண்டிருக்கிறான், எல்லா தெய்வங்களும் அவனைத் தொழுவதற்காக!’ என்றும் பாடி நெக்குருகுகிறார் ஆழ்வார்.
இந்தப் பாடலில் ‘குடக் கூத்த அம்மானே’ என்று பெருமாளை விளிக்கிறார் ஆழ்வார். அற்புத நாராயணன் அல்லது அமிர்த நாராயணன் என்று போற்றி வழிபடப்படும் பெருமாள் குடக்கூத்த அம்மானாக ஆழ்வாரால் பாடப்படுவானேன்?
முன்னொரு காலத்தில் இத்தலத்தில் நடைபெற்ற விழாக்களில் பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட இந்த நடனத்தை வைத்துதான் ‘குடக் கூத்த அம்மானே’ என்று ஆழ்வார் பெருமாளை ஆராதித்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
ஆனால், பகவான் கிருஷ்ணரைத்தான் இவர் பாடியிருக்கிறாரோ என்றும் சிந்திக்க வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால் இந்தக் கோயிலில் கிரு ஷ்ணருக்கென்று தனி சந்நதி இருக்கிறது; இரண்டொரு கிருஷ்ணர் சிற்பங்களும் தனியே காணக்கிடைக்கின்றன.
இந்திரனின் சீற்றத்தால் உருவான பெருமழையி லிருந்து கோகுலவாசிகளைக் காக்க கிருஷ்ணன் கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்து அருஞ்சேவை புரிந்தானே அந்த அற்புதத்தைக் கூட ‘குட கூத்த அம்மானே’ என்ற மூன்று சொற்களால் ஆழ்வார் விவரித்திருக்கலாம்.
கிருஷ்ணனின் இந்த லீலையை நினைவுகூரும் வகையில் இங்கு நடக்கும் விழாக்களில் குடைக் கூத்தும் இடம் பெற்றிருக்கின்றன எனலாம்.
இன்னொரு விளக்கமும் தரப்படுகிறது. அதாவது, குடத்தினை சுமந்துகொண்டு கோபியர் செல்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்மீதுதான் கிருஷ்ணனுக்குப் பிரேமை அதிகம் என்று நினைப்பு. அவர்கள் அவ்வாறு கர்வப்படுவதைக் கண்டிக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களை பந்துகள் போல மேலெழச் செய்து, தன்னிடம் வரச் செய்து லீலை நிகழ்த்தினான்.
தன்மீதுதான் கிருஷ்ணனுக்குப் பிரியம் அதிகம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கோபியர் இப்போது கிருஷ்ணனை மறந்துவிட்டு தத்தமது குடங்களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.
வெறும் குடத்துக்காக அப்போதைக்கு கிருஷ்ணனை மறந்துவிட்ட அவர்களது செயலை நகைப்புக்குரியதாக ஆக்கவே கிருஷ்ணன் இப்படி ஒரு லீலையை மேற்கொண்டான்.
இப்படித் தாவித் தாவி, குடத்துக்காக அவர்களைக் கூத்தாட வைத்த சம்பவத்தைதான் ‘குடக் கூத்தா’க நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த சம்பவத்தையே நம்மாழ்வார் ‘குடக் கூத்த அம்மானே’ என்று வர்ணித்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
கோயிலின் பிரதான நுழைவாயிலே வித்தியாசமாக இருக்கிறது. வளைவின் நடுவே மேலே ஸ்ரீதேவி சமேதராக ஸ்ரீமன் நாராயணன் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு இடப்பக்கம் சிவபெருமானும், வலப்பக்கம் விநாயகரும் வீற்றிருக்கிறார்கள்.
கீழ் நிலையில் வலப்பக்கம் ஐயப்பன், இடப்பக்கம் மயில் வாகனத்துடன் முருகன். கீழே இடது பக்கத் தூணுக்கு அருகில் தனி மாடத்தில் அமிர்த கலசத்துடன் நாராயணனும் (அமிர்த நாராயணன் அல்லது தன்வந்த்ரி), வலது பக்கத் தூணுக்கு அருகில் நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.
இந்தப் பிரதான நுழைவாயில், சமீப சில வருடங்களுக்கு முன்பாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
உள்ளே கேரள சம்பிரதாயத்துடன் கூடிய நுழைவாயிலில் ‘திருக்கோடித்தானம் மஹாக்ஷேத்திரம்’ என்று மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதனடியில் கிருஷ்ண லீலைகளும், திருமால் அவதாரக் காட்சிகளும் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இதற்கு முன் னால் ஐந்தடி உயர சிறு தூண் ஒன்றின் மீது மல்லாந்து படுத்த ஒரு நபரின் சிற்பம் காணப்படுகிறது.
தூண் மீது நடுமுதுகைப் பதித்து தலையோ, கால்களோ தொய்யாமல் விறைப்பாகப் படுத்திருக்கும் அந்த நபர் யார், அவர் கையில் சங்கு வேறு இருக்கிறதே என்ற திகைப்பிற்கு விடை கிடைக்கவில்லை.
அந்தச் சிற்பம் கேரள திவ்ய தேசம் வேறெதிலும் காணக்கிடைக்காததும் புதிரை வளர்க்கிறது. கோயில் சம்பந்தப்படாத, அந்த கிராமத்து சம்பிரதாயமாக அது இருக்கலாம் என்றும் சிலர் அபிப்ராயம் தெரிவித்தார்கள்.
கோயிலினுள் நுழைந்தால் வலப்பக்க மண்டபத்தில் கிருஷ்ணன் பெரிய உருவில் சிலையாக நம்மை வரவேற்கிறார். துவஜஸ்தம்பம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே சென்று கருவறையை அடையலாம். வழக்கம்போல வட்ட வடிவக் கருவறை.
இதன் வெளிச் சுவரில் ஓவியங்கள், தாம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதைப் பறைசாற்றியபடி பொலிவிழந்து காட்சி அளிக்கின்றன.
கர்ப்பகிரகத்தில் அற்புத நாராயணன் நான்கு திருக்கரங்களுடன் அழகுற தரிசனம் தருகிறார். இவருடனேயே தாயார் கற்பகவல்லியும் ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம். மூலவர் எப்படி அற்புதன் ஆனார்?
ருக்மாங்கதன், சூர்ய வம்சத்து மன்னன். இந்த வடநாட்டு மன்னன் தென்பகுதியிலும் கோலோச் சினான் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவனுக்குச் சொந்தமான ஒரு நந்தவனம் இங்கே இருந்திருக்கிறது.
அதில் மிகவும் வண்ணமய மானதாகவும், நறுமணம் மிக்கதாகவும் நீண்ட நாள் வாடாததாகவும் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்கின.
அந்தப் பகுதியின் மீது வான்வழியாகச் சென்ற சில தேவர்களும், தேவ மகளிரும் அந்த மலர்களால் ஈர்க்கப்பட்டனர்.
இவற்றைக் கொய்து எடுத்துச் சென்று தத்தமது கடவுளர்களை வழிபட்டால், அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள் என்று கருதினார்கள். உடனே கீழிறங்கி அவற்றைப் பறித்துச் சென்றார்கள்; தமக்கு விருப்பமான கடவுளர்களுக்கு சமர்ப்பித்து பக்தியால் உருகினார்கள்.
தொடர்ந்து மலர்கள் தன் நந்தவனத்திலிருந்து காணாமல் போவதை அறிந்த ருக்மாங்கதன் ஒரு அதிகாலைப் பொழுதில் அங்கே சென்றான்.
பொழுது புலருமுன் தேவர்களும், தேவமகளிரும் தமக்குள் உற்சாகமாகப் பேசிக்கொண்டபடி மலர்களைப் பறிப்பதைக் கண்டான்.
தேவர்களே விரும்பும் வண்ணம் அந்த மலர்கள் இருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தாலும், அதனை அவர்கள் களவாடிச் செல்வது அவனுக்கு உடன் பாடில்லாத செயலாக இருந்தது.
தன்னிடம் அனுமதி கேட்டு அவர்கள் எடுத்துச் சென்றிருக் கலாம் என்றே அவன் கருதினான். அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட எண்ணிய அவன், அவர்களை அப்படியே சிறைப்பிடித்தான்.
கந்தர்வர்களின் சாபம் அது. ஒருமுறை பூலோகவாசிகளால் தாம் பிடிக்கப்பட்டுவிட்டால், பிறகு எப்போதுமே தேவருலகத்துக்குத் திரும்ப முடியாது;
நிரந்தரமாக பூலோக வாசிகளாகிவிட வேண்டும்! திருமங்கையாழ்வாரின் பத்தினி குமுதவல்லியும் அப்படி வந்து பூலோக வாசியானவள்தானே! ஆனால், இவர்களோ தாங்கள் மீண்டும் தம் உலகத்துக்கே சென்றுவிட வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்கள்.
அதனால் ருக்மாங்கதனிடம் தங்களை விடுவித்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
இப்போது ருக்மாங்கதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களை மீண்டும் எப்படி தேவருலகத்துக்கு அனுப்புவது?
அப்போது அவனுடைய தர்மசங்கடத்தைப் போக்குவதுபோல ஓர் அசரீரி ஒலித்தது: ‘‘ருக்மாங்கதா, நீ வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து அனேகப் புண்ணியங்களைச் சேகரித்து வைத்துள்ளாய்.
உன் அந்தப் புண்ணியங்களை, அவற்றின் பயனை இந்த தேவர்களுக்கு தானமாகக் கொடுத்தாயானால், இவர்கள் பழையபடி தம் இருப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.’’
உடனே ருக்மாங்கதன் தன் புண்ணிய பயன்களை அவர்களுக்கு அளிக்க, அவர்கள் மிகுந்த நன்றியோடு அவனை வணங்கிவிட்டு, மகிழ்ச்சியுடன் தம் உலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பகவான் அங்கே பிரசன்னமாகி சம்பந்தப்பட்டவர்களை அனுக்கிரகிப்பார்.
ஆனால் இத்தலத்திலோ வெறும் அசரீரியாகவே தம் யோசனையைத் தெரிவித் திருக்கிறார். ஆகவேதான் இந்தப் பெருமாள் அற்புத நாராயணனாக வழிபடப்பட்டு வருகிறார். இந்த அற்புத நாராயணனை நம்மாழ்வார்,
அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பக சோலைத் திருக்கடித்தானமே
-என்று போற்றுகிறார். அதாவது, ‘இந்த அற்புத நாராயணன்தான் வாமனனாக அவதரித்த ஹரி.
இவன் என் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கிறான். மறைகள் ஓதும் வேதியர்கள் நிறைந்த, கற்பகச் சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளும் இவனே’ என்கிறார்.
இந்த சம்பவங்களெல்லாம், அதாவது, தேவர்கள் மலர்களைக் கொய்ததும், அவர்களை ருக்மாங்கதன் சிறைப்பிடித்ததும், அவர்கள் தம் உலகுக்கு மீள முடியாமல் தவித்ததும், அசரீரி ஒலித்ததும், ருக்மாங்கதன் தன் ஏகாதசி புண்ணியங்களை அவர்களுக்கு தானமாக அளித்ததும், அவர்கள் மேலுலகம் சென்றதுமான நிகழ்ச்சிகளெல்லாம் ஒரு கடிகை நேரத்தில் அதாவது ஒரு நாழிகை நேரத்தில் (இப்போதைய 24 நிமிடங்கள்) நடைபெற்றதால், இந்தத் தலம் திருக்கடித்தானம் என்று விளங்கலாயிற்று.
அதாவது இந்தத் தலத்தில் ஒரு நாழிகை நேரம் நாம் பெருமாளை ஆழ்ந்து தியானித்தோமானால் அனைத்து செயல்களிலும் வெற்றியும், நிறைவாக மோட்சமும் கிட்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
thanks to Indra Srinivasan for sharing this article
No comments:
Post a Comment