ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம்.
""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார்.
ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன். ""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார்.
பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல
மறுத்து விட்டார்,'' என்கிறார்.
""ரங்கநாதரை கண்குளிர தரிசித்து விட்டபின், எப்படி உங்களால் "போயிட்டு வர்ரேன்' என்று சொல்லி விட்டு கிளம்ப முடிகிறது. ரங்கனை சேவித்தால் அங்கேயே இருந்து விட வேண்டும்,'' என்பதே ஆழ்வார்களின் முடிவு.
""என்னை அவமானப்படுத்தியவன் விபீஷணன். அவனுக்காகவா சயனத்திருக்கிறீர்?'' என்று கேட்கிறாள் பிராட்டி. பெருமாளும் வியப்புடன், ""உம்மை யார் அவமானப்படுத்தியது?'' என்றார்.
அவரைப் பார்த்து தாயார், "" வானுலகில் பிரம்மா, குபேரன், இந்திரன் போன்றவர்கள் எல்லாம் என் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், நான் யாரும் கூப்பிடாமலே இலங்கைக்குப் போனேன்.
ஆனால், விபீஷணனோ ராவணனிடம், ""ராம பாணம் இலங்கையில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரையும் அழித்துவிடும். சீதை இங்கு வந்ததிலிருந்து இங்கு ரத்த ஆறு ஓடுகிறது. நரி ஊளையிடுகிறது. கொள்ளிக்கட்டைகள் கீழே விழுகிறது. இவளுக்கும் மங்கலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப் பழித்தவன் அவன்.
அவனுக்காக தெற்கு நோக்கி சயனத்திருக்கிறீரே?'' என்றாள்.
இந்த உரையாடல் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.
""விபீஷணன் நல்லதுக்காக ஒன்றைச் சொல்வானே தவிர, தீமைக்காக எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொல்லி இருந்தாலும், அதுவும் நன்மை கருதித் தான்,'' என்றார் பெருமாள்.
பிராட்டிக்கு பெருமாளின் பதிலைக் கேட்டு ஒரே ஆனந்தம். பிராட்டியின் நோக்கமும், விபீஷணன் மீது குறை சொல்வது அல்ல.
வீடு கட்டும் பெரிய கொத்தனார் போல பிராட்டி இங்கு செயல்படுகிறாள். கட்டிடம் கட்டும்போது, கட்டுமானம் உறுதியாக
இருக்கிறதா? என்று அவ்வப்போது அவர் சோதித்துப் பார்ப்பார்.
பக்தர்களுக்காக பெருமாளை அவள் சோதித்துப் பார்க்கிறாள். அவர்கள் பெருமாளிடம் நிலையாக சேர்ந்து விட்டார்களா என்று சோதிக்கிறாள். இதுவும் அவளுடைய புருஷகாரம் என்னும் கருணையே.
பிராட்டி கருணையே உருவான கடலாக விளங்குகிறாள். நம் குற்றத்தை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. நம்மை பெருமாளோடு சேர்த்து வைப்பதே அவளுடைய லட்சியம்.
பிராட்டி என்னும் கருணைக் கடலில், நாம் இன்னும் பிராயாணம் செய்யவில்லை. ""இதோ கடல்! என்று கரையில் நின்று பார்த்து ஆனந்திக்கிறோம்! அவ்வளவு தான். அவளின் வைபவத்தைக் கண்டு பெருமாளே ஆனந்தப்படுகிறார்.
தயாசதகத்தில் வேதாந்ததேசிகன் பிராட்டியின் கருணையை வியந்து பாடியுள்ளார். ""திருவேங்கடமுடையானுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம் என எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால், பிராட்டியின் தயை அவருடன் சேராவிட்டால், அத்தனையும் தோஷமாகி விடும்.
பிராட்டியின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கே ஏற்றம் உண்டானது. அதனால் தான் பிராட்டியை லட்சுமி, மாதா என்றெல்லாம் போற்றி வணங்குகிறோம்,'' என்கிறார் தேசிகன்.
அவளது கருணையைப் பெற ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை.
தெருவில் செல்லும்போது, தாயார் சந்நிதியைப் பார்த்து, கீழே கிடக்கும் கைகளை உயர்த்தி, ""தாயே வணக்கம்'' என்று கைகூப்பினால் போதும். அவள் நம்மை தலையாலேயே சுமக்கத் தயாராகி விடுவாள்.
காஞ்சிபுரம் தேவபெருமாள் அபயஹஸ்தத்தோடு(மேல்நோக்கிய கரம்) காட்சி தருகிறார். ஆனால், அவரை வரதன் என்று அழைக்கிறோம்.
அவருக்கு ஏன் அப்படி பெயர் வந்தது? ஊருக்குள் பேரும் புகழும் மிக்க பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவர் ஆற்றில் நீராடுகிறார். அவர் மார்பில் அணிந்திருக்கும் யக்ஞோபவிதம்(பூணூல்) காணாமல் போனது. ஊரில் பார்ப்பவர்கள் அவரை பிராமணர் கிடையாது என்று மறுத்து விடுவார்களா என்ன?
அதுபோலத்தான், தேவபெருமாள் அபய ஹஸ்தம்
காட்டினாலும், பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குவதால், வரதப்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.
அப்படி வாரி வழங்கும் பெருமாளுக்கு, பாவாத்மாவான நம்மைக் கண்டால் சிலநேரத்தில் கோபம் வந்துவிடும்.
அதுவும் கூட நம் நன்மைக்காகத் தான். சம்சார சாகரத்தில், எவ்வளவு காலம் தான் இவர்கள் கிடக்கப் போகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கப் போகிறார்கள்? தர்மத்தைக் கடைபிடித்து எப்போது மோட்சகதியை அடைவார்கள்? என்ற கோபம் தான்.
அப்போதும் தாயாரே நம் சார்பாக பெருமாளிடம் பேசத் தொடங்குகிறாள். ""எதை வேண்டுமானாலும் போனால் போகட்டும் என்று வாழ்வில் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பேரை விட்டு விட்டால் அதைப் பெற முடியாது.
உபநிஷதங்கள் உம்மை,"புருஷோத்தமன்' "நாராயணன்' என்று போற்றுகின்றன. வாரி வழங்கும் இயல்பை விடக் கூடாது. அவர்களைக் காத்தருள வேண்டும்,'' என்று வேண்டுகிறாள்.
பரீட்சையில் வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இருவித இயல்பு உண்டு. வழிமுறை சரியாக இருந்தாலே மதிப்பெண் என்று ஒரு ரகம்,
முடிவு சரியாக இருந்தால் தான் மதிப்பெண் என்று ஒரு ரகம்.
இரக்கமுள்ள தாயாரின் வழிகாட்டுதலால், பெருமாள் நாம் எந்த ரகமாக இருந்தாலும், மதிப்பெண் வழங்க காத்திருக்கிறார்.
தொண்டரடிப் பொடியாழ்வார் தன் பாசுரத்தில், ""வெட்டி வெட்டிக் கொண்டு பெருமாளை விலகிக் கொண்டே சென்றேன். ஆனால், பெருமாளே என்மீது அன்பு கொண்டு விட்டுக் கொடுக்காமல் என்னை ஒட்டிக் கொண்டு வந்தார். இப்போதோ அவரின் வடிவழகைக் கண்டு மயங்கி நின்றேன். என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார்,'' என்று பாடுகிறார்.
எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அந்த கைங்கர்யத்தைச் செய்து பெருமாளின் திருவடிகளில் நம்மைச் சேர்த்து வைப்பவள் பிராட்டியே.
- இன்னும் ஆனந்திப்போம்
thanks to Indra Srinivasan for this article.
No comments:
Post a Comment